விவாகரத்து பெற்ற கணவரின் காரை அபகரித்த வழக்கில் சிறை தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த பெண் கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
விவாகரத்து பெற்ற கணவரின் காரை அபகரித்த வழக்கில் சிறை தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த பெண்ணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு,
ஈரோடு சேட் காலனி அகில்மேடு வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவருடைய மனைவி முத்துலட்சுமி (39). இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு, கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு முன்பு முருகேசன் தனது காரை முத்துலட்சுமியிடம் கொடுத்து இருந்தார்.
இந்தநிலையில் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் முத்துலட்சுமி காரில் சென்றுகொண்டு இருந்தார். அந்த காரை ஈரோடு வில்லரசம்பட்டி பனங்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்த சேகர் (40) என்பவர் ஓட்டினார். அந்த காரை தடுத்து நிறுத்திய முருகேசன், தன்னிடம் காரை ஒப்படைத்துவிடுமாறு கூறிஉள்ளார். அதற்கு முத்துலட்சுமி, கார் தனது பெயரில் மாற்றப்பட்டு உள்ளதாக காரின் உரிமச்சான்று புத்தகத்தை காண்பித்தார். இதைப்பார்த்து முருகேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் முருகேசன் புகார் கொடுத்தார். அந்த புகாரில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து முத்துலட்சுமியும், சேகரும் தன்னுடைய காரை அபகரித்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறிஇருந்தார். இதைத்தொடர்ந்து முத்துலட்சுமி, சேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும், அவர்கள் 2 பேர் மீதும் ஈரோடு முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், முருகேசனுக்கு சொந்தமான காரை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த குற்றத்திற்காக முத்துலட்சுமிக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், சேகர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின்னர் ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் முத்துலட்சுமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.ஆர்.ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர், முத்துலட்சுமியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், கடந்த 31-10-2017 அன்று முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்றும் கூறினார் ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.
இதைத்தொடர்ந்து முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி பி.ஆர்.ராமகிருஷ்ணன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த முத்துலட்சுமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முத்துலட்சுமியை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் முத்துலட்சுமியை போலீசார் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story