கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருள் மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்


கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருள் மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 9 July 2018 4:45 AM IST (Updated: 9 July 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருள் பயன்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

மும்பை, 

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருள் பயன்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி

நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை பூர்த்தி செய்யும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் இறக்குமதி சார்ந்தே அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தியாவின் அன்னிய செலவானி அதிகரித்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போக்கு நிலவி வருகிறது.

இந்தநிலையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிபொருட்களை பயன்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து மந்திரி நிதின் கட்காரி மேலும் கூறியதாவது:-

எத்தனால் பயன்பாடு

அரசு சார்பில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவு செய்யப்படுகிறது. இது பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. கச்சா எண்ணெயின் உள்நாட்டு உற்பத்தியையும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகப்படுத்த முடியாது.

கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்க பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்தலாம். தற்போது சர்க்கரை ஆலைகளால் உற்பத்தி செய்யப்படும் எத்தனால், 5 சதவீதம் அளவில் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலுடனான எத்தனாலின் பங்கை 22 சதவீதம் வரை அதிகரிக்கலாம். ஆனால் நாம் இந்த அளவுக்கு எத்தனால் உற்பத்தி செய்வதில்லை.

100 சதவீதம் எத்தனால் அல்லது பெட்ரோல் அல்லது இரண்டையும் பயன்படுத்தக்கூடிய ‘பிளக்ஸ் என்ஜின்கள்’ தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த என்ஜின்கள் மூலம் 100 சதவீதம் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த திட்டத்துக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு தயாராக உள்ளன. இவற்றை அமல்படுத்தும் பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story