பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த சண்முகநதி மேம்பாலம்
பராமரிப்பு இல்லாததால் சண்முகநதி மேம்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழனி,
பழனியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் வண்டிவாய்க்கால் அருகே சண்முகநதி அமைந்துள்ளது. பழனிக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் புனிதநீராடிவிட்டு மலைக்கோவில் நோக்கி செல்வார்கள். இந்த நிலையில் சண்முகநதியின் குறுக்காக கடந்த 1974-ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பழனியில் இருந்து உடுமலை, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.
முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புகள் சேதமடைந்து வருகின்றன. தடுப்புகளில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
ஒரு சில இடங்களில் தடுப்புகள் முழுமையாக உடைந்து கீழே விழுந்துவிட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தடுப்புகள் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் பாலம் முழுவதும் உள்ள தடுப்புகள் உடைந்து விழும் வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு உடைந்து விழும்பட்சத்தில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தில் இருந்து விலகி சண்முகநதியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த நிலையில் இருக்கும் மேம்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும் என்றனர்.
Related Tags :
Next Story