அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்


அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2018 3:00 AM IST (Updated: 9 July 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வராததை கண்டித்து அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த அதனூர் ஊராட்சிக்கு உட்பட்டது தர்மாபுரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 58 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். அவர்களில் ஒரு ஆசிரியர் பணிமாறுதலில் சென்று விட்டதால் தற்போது தலைமை ஆசிரியர், மற்றொரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் தலைமை ஆசிரியர் கடந்த சில நாட்களாக சரிவர பணிக்கு வருவதில்லை. இதனால் ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளிக்கு வந்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

இதுபற்றி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். இருப்பினும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை 9.15 மணி ஆகியும் தலைமை ஆசிரியரும், மற்றொரு ஆசிரியரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வகுப்பறையிலேயே காத்திருந்தனர்.

இதையறிந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை வகுப்பறையில் இருந்து வெளியே வரவழைத்தனர். தொடர்ந்து, அந்த பள்ளியின் கதவுகளை இழுத்து மூடி பூட்டுப்போட்டு மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர்கள் பணிக்கு வராததை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இதையடுத்து விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர்ராஜன், கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவ- மாணவிகள் கூறுகையில், எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர்,மற்றொரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். அவர்கள் அடிக்கடி விடுப்பில் சென்று விடுவதால் நாங்கள் பாடம் படிக்க முடியவில்லை. எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த தாசில்தார் சுந்தர்ராஜன், இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனிடையே காலை 10 மணிக்கு ஆசிரியர் பணிக்கு வந்ததும் மாணவ- மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குள் சென்றனர். அதன் பின்னர் அவர்களது பெற்றோர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story