மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை அருகே 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.8 கோடியில் சிறப்பு திட்டம் + "||" + A special scheme to provide drinking water to 15 villages near Sterlite plant

ஸ்டெர்லைட் ஆலை அருகே 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.8 கோடியில் சிறப்பு திட்டம்

ஸ்டெர்லைட் ஆலை அருகே 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.8 கோடியில் சிறப்பு திட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.8 கோடியில் சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் நேற்று மதியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து உயர்மட்டக்குழு அறிக்கையின்படி, இருப்பு வைக்கப்பட்டு உள்ள ரசாயனங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஜிப்சம் உள்ளிட்டவை லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெட்ரோலியம் பொருட்களான எல்.பி.ஜி.யை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திரும்ப பெறுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இல்லாதபட்சத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேறு நிறுவனங்களுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும். அதேபோன்று ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம், மாநகராட்சியில் இருந்து பணம் செலுத்தி தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆலையில் கழிவுகள் கொட்டி வைப்பதற்காக தோண்டப்பட்ட குழியை மூடும் பணியும் நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள 15 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ரூ.8 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று அந்த கிராமங்களுக்கு சாலை வசதி, அங்கன்வாடி உள்ளிட்ட வசதிகளையும் மக்கள் கேட்டு உள்ளனர். இதுதொடர்பாக அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 கிராமங்களுக்கு தேவையான வசதிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

வாழைப்பயிர்களை பாதுகாப்பதற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருக்கிறது.இந்த தண்ணீர் 4 கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட இணையதளம் அனைவரும் எளிதில் பார்க்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அறிவுரையின் பேரில், இணையதளத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. சமூக வலைதளங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.