வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு


வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2018 3:30 AM IST (Updated: 10 July 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் நாளை (புதன்கிழமை) வீரன் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும் நாளை காலை 5 மணி முதல் 12-ந் தேதி காலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கட்டாலங்குளம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கட்டாலங்குளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்து விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் ஜோதி (விழா நிகழ்விடத்தில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு வெளியே) கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் விழாவில் கலந்துகொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவானது அமைதியான முறையில் நடக்க மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலில் இருக்கும் நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story