காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 9 July 2018 10:30 PM GMT (Updated: 9 July 2018 7:18 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஏரிகள் பராமரிப்பு பணிகளை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம்,

ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சீபுரம் விளங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 900–க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரி நீரை பயன்படுத்தி நெல், கரும்பு, கேழ்வரகு, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் பெய்யும் மழையால் இந்த ஏரிகள் நிரம்புகின்றது. அதன் மூலம் விவசாயிகள் ஏரி பாசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அந்த ஏரிகளுக்கு தேவையான மழைநீர் வரத்து இல்லாமல் ஏரிகள் நிரம்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் ஆதனூர், காவாந்தண்டலம், தென்னேரி, ஆண்டிதாங்கள் உள்ளிட்ட ஏரிகளில் மதகுகள் உடைந்தும், பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகின்றன. இதனால் தற்போது ஏரிகளில் இருக்கும் உபரிநீரும் வீணாகி வருகிறது.

இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். பருவ மழைக்கு முன்னதாகவே தற்போது ஏரிகளில் உள்ள பழுதுகளை சீரமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி பொதுப்பணித்துறை சார்பில், தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன், காஞ்சீபுரம் அருகே தென்னேரி, காவாந்தண்டலம் உள்ளிட்ட ஏரிகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது பருவ மழைக்கு முன்பாக ஏரிக்கரைகளை இடித்து கட்டும் குடிமராமத்து பணிகள், ஏரிக்கரைகள் சீரமைப்பு, கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.


Next Story