மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முத்ரா கடன் கேட்டு திரண்ட பெண்கள் + "||" + Women gathered for Mudra loan in Ramanathapuram Collector's office

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முத்ரா கடன் கேட்டு திரண்ட பெண்கள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முத்ரா கடன் கேட்டு திரண்ட பெண்கள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முத்ரா கடன் கேட்டு போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஆயிரக்கணக்கில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

பிரதமரின் சிறப்பு திட்டங்களின் ஒன்றான இணை பிணையம் இல்லாத வங்கி கடன் வழங்கும் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. பிணைய உத்தரவாதம் வழங்க தேவையில்லை என்பதால் ஏராளமானோர் தொழில் தொடங்கி சொந்த காலில் நிற்க கடன் கேட்டு விண்ணப்பித்து கடன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் குறித்து மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக நாள்தோறும் ஏராளமானோர் முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்கக்கோரி மனு வழங்கி வருகின்றனர்.

முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்ற வதந்தி பரவி உள்ளதால் நாள்தோறும் கடன் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் யூனியன் அலுவலகங்களிலும், வங்கிகளிலும் திரண்டு மனு கொடுத்து வந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தவண்ணம் உள்ளனர்.

குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிம் மனு கொடுத்தால் கடன் கிடைக்கும் என்ற வதந்தி பரவியதால் இந்த கூட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

கடந்த வாரங்களை காட்டிலும் நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாக வந்து மனுக்களை எழுதி குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்தனர். இதன்காரணமாக கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதும் பெண்களின் கூட்டமாக காணப்பட்டது. நகல் எடுக்கும் இடங்களிலும், மனு எழுதி கொடுக்கும் இடங்களிலும் பெண்களின் கூட்டம் அலைமோதியது. என்ன காரணம், எதற்காக கடன் கொடுக்கின்றனர், என்ன ஆவணங்கள் தேவை, எவ்வாறு திருப்பி செலுத்த வேண்டும், கடன் தொகை கிடைத்தவுடன் தொழில் தொடர்பாக காண்பிக்க வேண்டிய கட்டமைப்புகள் என்ற எந்த ஒரு விவரங்களும் தெரியாமல் மோடி கடன் கொடுங்கள் என்று மனு எழுதி கொடுப்பவர்கள் அதிகஅளவில் உள்ளனர்.

இதுகுறித்து பெண்களிடம் கேட்டபோது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என்றும், தோல்வி அடைந்தால் 40 சதவீத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியதால் கடன் பெற வந்துள்ளதாக தெரிவித்தனர். அனைவரும் தாங்களாக தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்பதற்காக முத்ரா கடன் பிணையில்லாமல் வழங்குவதை அறியாமல் இலவசமாக தள்ளுபடி செய்யப்படும் என்ற தவறான கருத்தை நம்பி பெண்கள் படையெடுத்து வந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

குறிப்பாக ஏழை பெண்கள் சிறிதளவில் மட்டுமே வந்ததையும், வசதியான பெண்கள் அதிகஅளவில் வந்ததையும் பார்க்க முடிந்தது. அதிகஅளவில் போட்டி போட்டுக்கொண்டு மனுக்களுடன் ஓடி வந்து வரிசையில் நின்று கடன் கேட்டு மனு கொடுத்தனர். அதிகஅளவில் மனுக்களுடன் பெண்கள் திரண்டு வந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இதன்காரணமாக முத்ரா கடன் கேட்டு விண்ணப்பங்களுடன் வந்த பெண்களிடம் அதிகாரிகள் வாசலில் தனியாக நிறுத்தப்பட்டு அந்த மனுக்களை மட்டும் தனியாக வாங்கினர். அந்த அளவில் கலெக்டர் அலுவலகம் முழுவதும் முத்ரா கடன் கேட்டு வந்த பெண்களின் கூட்டம் இருந்தது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் தள்ளுபடி என்ற கண்ணோட்டத்தில் பரவிவரும் வதந்தியை நம்பி பெண்கள் மனு கொடுத்து வருவதால் இதுகுறித்து முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...