மாவட்ட செய்திகள்

குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது + "||" + Courtallam Main Falls Water inflow at least

குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி. 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாதம் இறுதியில் சீசன் தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலேயே சீசன் களை கட்டியது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. கடும் வெயில் அடித்தது. ஆனால் காற்றின் வேகம் குறையாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வரிசையில் வெகு நேரம் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலைக்கு மேல் குற்றாலத்தில் மலைப்பகுதியில் பலத்த சாரல் மழை பெய்தது. இதனால் திடீரென அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளில் அவர்கள் குளித்து சென்றனர்.

நேற்று காலை மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. சாரல் மழை நேற்று காலையில் இருந்தே விட்டு விட்டு பெய்து வருகிறது.

நேற்றுமுன்தினம் மதியம் வரை மந்தமாக இருந்த சீசன் மாலைக்கு மேல் திடீரென மாறி அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஒரே நாளில் குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.