ராகுல்காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து - நாராயணசாமி தகவல்
ராகுல்காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
கடந்த 2017–ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தேசமாக ரூ.7,530 கோடியில் பட்ஜெட் தயாரிப்போம் என்று உள்துறை, நிதித்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தோம். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் மாநில திட்டக்குழு கூட்டம் நடத்தி கோப்புகளை அனுப்பி மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டோம். ஆனால் புதுவை மாநிலத்தில் உள்ள சில சக்திகளும், மத்திய அரசில் சில சக்திகளும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் தராவிட்டால் ஆட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படும் என்று செயல்பட்டபோது உள்துறை மந்திரியை சந்தித்து ஒப்புதல் தரக்கோரினேன்.
அவரும் ஒப்புதல் தருவதாக கூறினார். அதனையேற்று சட்டமன்றம் கூட்டப்பட்டது. ஆனால் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்காததால் மீண்டும் உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தினேன். அதன்பின்தான் ஒப்புதல் கிடைத்தது. எந்த திட்டத்தினை அனுப்பினாலும் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. 2 ஆண்டு காலமாக கோப்புகளுக்கு என்ன நிலை ஏற்படுகிறது? என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
கடந்த காலங்களில் அந்த நிலை கிடையாது. இப்போது தேவையில்லாத கேள்விகளை கேட்டு காலதாமதம் செய்கின்றனர். சில கோப்புகளுக்கு போதிய விளக்கம் கொடுத்தாலும் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் சுற்றுலா, சாகர்மாலா திட்டங்களுக்கு நிதி பெற்று செலவிட்டுள்ளோம்.
சில திட்டங்களுக்கு 90 சதவீத நிதியை தருவதாக கூறிய மத்திய அரசு 60 சதவீத நிதிதான் தந்தது. மீதித்தொகையை மாநில அரசின் நிதியிலிருந்து போட்டு பணிகளை முடித்துள்ளோம். மாநிலங்களுக்கு 42 சதவீதம் நிதி தரும் மத்திய அரசு புதுச்சேரிக்கு 25 சதவீதம்தான் தருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்களை கணக்கிட்டு திட்டமிட்டு நிதியை செலவிடுகிறோம்.
இலவச அரிசியை காலத்தோடு கொடுக்காததற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். நாங்கள் யாருடனும் அதிகாரபோட்டியில் ஈடுபடவில்லை. அதிகாரங்கள் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக நான் சொல்லி வந்த கருத்தை சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளது. தீர்ப்பின் 231–வது பக்கத்தில் கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் கிடையாது என்றும், அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? பொருந்தாதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, அதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும் என்றார். தொடர்ந்து கேள்வி எழுப்பிய ரங்கசாமி, சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல் மந்திரி வழக்கு தொடர்ந்திருக்கும்போது அந்த வழக்கில் நீங்களும் இணைந்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது பதில் அளித்து பேசிய முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–
டெல்லி முதல் மந்திரி வழக்கு தொடுத்தபோது நானும், லட்சுமிநாராயணன் எம்.எம்.ஏ.வும் டெல்லி சென்று அதற்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் முதலில் ஐகோர்ட்டில் வழக்குக்கு சென்றுவிட்டுதான் இங்கு வரவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். அதைத்தொடர்ந்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இப்போது சென்னை ஐகோர்ட்டில் தொடங்கியுள்ளது.
தற்போது மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதியினை மாற்றி அரிசியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் புதுவை விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுப்போம். 6, 9, 11–ம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். பிப்டிக் நிலத்தை உள்ளாட்சி துறைக்கு மாற்ற உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால் அமைச்சரவையில் பிப்டிக்கிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளோம். இதற்கு உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் இல்லை என்று கடிதம் எழுதியுள்ளேன்.
மாநில அந்தஸ்து தொடர்பாகவும் பேசப்பட்டது. ஏற்கனவே மாநில அந்தஸ்து பெற்ற ஆந்திரா, பீகார் மாநிலங்களில் தற்போது சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறார்கள். ராகுல்காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தருவதாக கூறியுள்ளார். புதுவை பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் எந்தவித விமர்சனமும் இல்லை. இருக்கும் நிதிநிலையில் சிறப்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தொடர்ந்து இதேபோல் சட்டசபைக்கு வந்து ஆலோசனைகளை வழங்கவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.