கம்பம் மேற்கு வனப்பகுதியில் நாய்கள் மூலம் மான்களை வேட்டையாடும் கும்பல்


கம்பம் மேற்கு வனப்பகுதியில் நாய்கள் மூலம் மான்களை வேட்டையாடும் கும்பல்
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 8:24 PM GMT)

கம்பம் மேற்கு வனப்பகுதியில், நாய்கள் மூலம் மான்களை வேட்டையாடும் கும்பலை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கூடலூர்,

தமிழக-கேரள மாநில எல்லையில் தேனி மாவட்ட வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கேரள எல்லை, குடியிருப்பாக இருக்கிறது. இதனால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழக வனப்பகுதிக்குள் எளிதாக சென்று வர வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்கும் வகையில், கூடலூர் மற்றும் கம்பம் வனப்பகுதியான குமுளி மலையில் இருந்து சுரங்கணார் பீட், கழுதைமேடு பெருமாள் கோவில் புலம், செல்லார் கோவில் மெட்டு, ஏகலூத்து, கம்பம்மெட்டு பகுதிகள் வரை 20 கிலோமீட்டர் தூரத்துக்கு வனப்பகுதியில் ரோந்து பாதை அமைக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி அங்கு பணிபுரியும் வனத்துறையினர் தங்குவதற்கு தமிழக-கேரள எல்லையில் குடியிருப்பு உள்ளது. ஆனால் போதிய அடிப்படை வசதி இல்லாததால் வனத்துறையினர் அங்கு தங்குவதில்லை. ரோந்து பணியிலும் வனத்துறையினர் சரிவர ஈடுபடுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் அத்துமீறி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கூடலூர், லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் வனப்பகுதிக்குள் ஊடுருவி வனவிலங்குகளை வேட்டையாடுகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் ஒரு கும்பல் கம்பம் மேற்கு வனப்பகுதிக்குள் வேட்டை நாய்களுடன் புகுந்தது.

பின்னர் அவர்கள், செல்லார் கோவில் மெட்டு பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, வேட்டை நாய்களிடம் சிக்கிய மிளா மான் பரிதாபமாக இறந்தது. அதன் இறைச்சியை பயன்படுத்தாமல், அங்கேயே போட்டு விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த மானின் உடலை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. மேலும் மான் வேட்டையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கூடலூர், கம்பம் கிழக்கு, கம்பம் மேற்கு வனப்பகுதிகளில் மான் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு சிறப்பு வன பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story