‘ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின் இணைப்பு தேவையில்லை’ மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ஆபத்தான பொருட்களை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடப்பதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் (சட்டம்) சத்யப்பிரியா தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டு உள்ளதால் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்தநிலையில் ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கந்தக அமிலம் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டபோது, இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்கு சென்று குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்க முடியவில்லை.
இதேபோல எல்.பி.ஜி. கியாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து இவற்றை பராமரிக்காமல் வைத்திருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகளோ ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே கழிவுகளை அகற்றவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பவும், தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “தொழிற்சாலையில் உள்ள ஆபத்தான பொருட்களை அங்கிருந்து அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை மாவட்ட கலெக்டர் அமைத்துள்ளார். ஆலையில் எடுக்கப்பட்டு வரும் துரித பணிகளை ஆய்வு செய்து அந்த குழு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இந்த பணிகளை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆலையில் உள்ள பொருட்களை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஆலையின் கோரிக்கையை ஏற்க தேவையில்லை“ என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.