கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் வந்து கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்து. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் அடிப்படை வசதிகள், உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர்.
அப்போது திண்டுக்கல் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். கிராம மக்கள் கூறுகையில், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் 3 ஆயிரம் பேர் வசிக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக காமராஜர் அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே குடிநீர் வழங்கும் முறையை திடீரென மாற்றம் செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தோல் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆழ்துளை தண்ணீரை குடிக்க முடியவில்லை. எனவே, தினமும் காமராஜர் அணை குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.
அதேபோல் நிலக்கோட்டை தாலுகா பச்சைமலையான்கோட்டை ஊராட்சி எஸ்.புதுக்கோட்டை மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் குடிநீருக்காக சிரமப்படுகிறோம். எங்கள் ஊர் வழியாக தான் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. எனவே, எங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வேல்வார்கோட்டை பொதுமக்கள் கொடுத்த மனுவில், வேல்வார்கோட்டையில் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படுவது இல்லை. மேலும் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. அதேபோல் சுகாதார வசதிகளும் முறையாக நடைபெறுவது இல்லை. அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இலங்கை தமிழர்கள்
சின்னாளபட்டி அருகேயுள்ள காந்திகிராமம் சிலோன்காலனியை சேர்ந்த இலங்கை தமிழர்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் எடுத்து பிற பகுதிகளுக்கு வினியோகம் செய்கிறார்கள். ஆனால், எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்குவது இல்லை. மாதத்துக்கு 2 முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு கொடுத்த நிலத்தில் வசித்து வருகிறோம். சிலர் சொந்த நாட்டுக்கு சென்று விட்டதால் அதில் பொதுமக்கள் வசிக்கிறோம். இந்த நிலையில் இடத்தை காலிசெய்யும்படி சிலர் மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும், என்றனர்.
மேலும் ஆதித்தமிழர் பேரவையினர் கொடுத்த மனுவில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறக்கின்றனர். இதை தவிர்க்க கேரளாவில் மனித கழிவுகளை அள்ளுவதற்கு ரோபோவை அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் தமிழகத்திலும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கு ரோபோவை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஆர்.வெள்ளோடு நொச்சிபட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், நொச்சிபட்டியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் கிரானைட் குவாரி அமைக்க முயற்சி நடக்கிறது. கிரானைட் குவாரி அமைந்தால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே, கிரானைட் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது, என்று கூறியிருந்தனர்.
ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எம்.துரை கொடுத்த மனுவில், சின்னாளப்பட்டியில் உள்ள எனது வீடு மற்றும் நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அங்கு அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் பேசும்படி கூறினர். அவரிடம் பேசியபோது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ரூ.30 ஆயிரம் கேட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிளிபட்டி, வேம்பார்பட்டியை சேர்ந்த தப்பாட்ட கலைஞர்கள் கொடுத்த மனுவில், மாவட்டம் முழுவதும் தப்பாட்ட கலைஞர்கள் நலிவடைந்து வருகின்றனர். அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்கினால் கலைஞர்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். கலை மற்றும் பண்பாட்டு துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கொடைக்கானல் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், கொடைக்கானலில் வாடகை வீடுகளில் வசிக்கும் 178 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். முன்னதாக அவர்கள் முதல்-அமைச்சரை வாழ்த்தி கோஷமிட்டபடி வந்தனர்.
Related Tags :
Next Story