மக்காச்சோள படப்புக்கு தீ வைப்பு; 3 பேர் மீது வழக்கு
பழனி அருகே மக்காச்சோள படப்புக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பழனியை அடுத்த தொப்பம்பட்டி அருகே உள்ள சரவணம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). விவசாயி. இவர் தனது வீட்டருகே படப்பு அமைத்து அதில் மக்காச்சோள கட்டுகளை சேமித்து வைத்திருந்தார். நேற்று மதிய வேளையில் திடீரென அதில் தீப்பற்றியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் மக்காச்சோள படப்பு முழுமையாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து கீரனூர் போலீசில் தங்கராஜ் அளித்த புகாரில் மர்ம நபர்கள் தனது மக்காச்சோள படப்புக்கு தீ வைத்ததாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மக்காச்சோள படப்புக்கு தீ வைத்தது அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி (70), பழனிச்சாமி (60), கோவிந்தசாமி (58) என்பதும், சொத்து பிரச்சினையில் தங்கராஜ் மீது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மக்காச்சோள படப்புக்கு அவர்கள் தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்னசாமி உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story