தகராறை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


தகராறை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே தகராறை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டிவீரன்பட்டி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின்ரோட்டில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் வத்தலக்குண்டுவை சேர்ந்த நஜ்முதீன் என்பவர் இல்ல திருமண விழா நடந்தது. விழாவில் பங்கேற்க அவருடைய நண்பர்கள் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 46), பிரசன்னா (34), தீனதயாளன் (52), சுரேஷ்குமார் (46), அகஸ்டின் (51) ஆகியோர் வந்துள்ளனர்.

பின்னர் திருமணம் முடிந்து அவர்கள், மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, திருமண மண்டபத்துக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்ய வந்த வத்தலக்குண்டுவை சேர்ந்த முகமது அன்சாரி (39) என்பவருக்கும், தீனதயாளனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர்.

இதையடுத்து முகமது அன்சாரி, தனது நண்பர்களான ஜெய்லானி (32), ரசாக் (28) ஆகியோரை அழைத்து வந்து மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த ரமேஷ், தீனதயாளன், முகமதுஅன்சாரி ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பட்டிவீரன்பட்டி போலீஸ் ஏட்டு சந்திரலிங்கம் அங்கு விரைந்து வந்துள்ளார். அப்போது தீனதயாளன் தரப்பை சேர்ந்த சுரேஷ்குமார், பிரசன்னா ஆகியோர் ஏட்டு சத்திரலிங்கத்தை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து ஏட்டு சந்திரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், பிரசன்னா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ், பிரசன்னா, தீனதயாளன், சுரேஷ்குமார், அகஸ்டின் மற்றும் முகமது அன்சாரி, ஜெய்லானி, ரசாக் ஆகிய 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story