போலி மதுபான குடோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைப்பு


போலி மதுபான குடோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 10 July 2018 4:15 AM IST (Updated: 10 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே போலி மதுபான குடோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் கோழி பண்ணை உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே பொட்டல் வாத்தியார் தோப்பில் உள்ள கோழி பண்ணையில் போலி மதுபான குடோன் செயல்பட்டு வந்ததை நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனை நடத்தி கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 175 லிட்டர் எரிசாராயம், 70 லிட்டர் போலி மதுபானம், எரிசாராயம் மூலம் போலி மதுபானம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக கோழி பண்ணை உரிமையாளரான என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த செந்தில்குமார், காவலாளி மாயாண்டி, தக்கலையை சேர்ந்த துளசி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் சுந்தர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் மாயாண்டியை நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். துளசி மற்றும் கார்த்திக் ஆகியோர் திண்டுகல்லில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சுந்தர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் இந்த தனிப்படை செயல்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

வாத்தியார் தோப்பில் போலி மதுபான குடோன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் போலீசாரால் உறுதி செய்யப்படவில்லை. மேலும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இங்கிருந்து போலி மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‘செந்தில்குமார் கைது செய்யப்பட்ட பிறகுதான் இங்கு தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் எந்தெந்த பகுதிகளுக்கெல்லாம் சப்ளை செய்யப்பட்டுள்ளன? என்பது தெரியவரும். மேலும் போலி மதுபானம் தயாரிப்பதற்காக எரிசாராயம் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட மாயாண்டி கூறியுள்ளார். ஆனால் அதை யாரிடம் இருந்து வாங்கினார்கள்? என்ற விவரம் அவருக்கு தெரியவில்லை. இதுகுறித்தும் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறோம்‘ என்றனர். 

Next Story