ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலி


ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 July 2018 11:15 PM GMT (Updated: 9 July 2018 10:00 PM GMT)

சத்தியமங்கலம் அருகே ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 32). இவர் வீட்டில் வைத்து கைத்தறி புடவை மற்றும் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு ரிஸ்வன் (8), தக்‌ஷன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ரிஸ்வன் 3-ம் வகுப்பும், தக்‌ஷன் எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (35). சாயப்பட்டறை தொழிலாளி. இவருக்கு பத்மா (30) என்ற மனைவியும், கார்த்திக்குமார் (10), சந்தோஷ்குமார் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கார்த்திக்குமார் 5-ம் வகுப்பும், சந்தோஷ்குமார் 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

பண்ணாரியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சரவணக்குமார், முருகேஷ் மற்றும் அவர்களுடைய நண்பர்களான சத்தியமங்கலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (40), விஜயகுமார் (33), நிஷாத் (23), இம்ரான் (40) ஆகியோர் விருந்துக்கு சென்றனர். விருந்து முடிந்ததும் இரவு 9.30 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை சரவணகுமார் ஓட்டினார்.

சத்தியமங்கலத்தை அடுத்த வடவள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே சரவணக்குமார், முருகேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் கோவிந்தராஜ், விஜயகுமார், நிஷாத், இம்ரான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story