வெள்ளகோவில் அருகே இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்


வெள்ளகோவில் அருகே இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 9 July 2018 10:26 PM GMT (Updated: 9 July 2018 10:26 PM GMT)

வெள்ளகோவில் அருகே இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டரிடம், தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சந்திரசேகர், ஜெகதீஸ் மற்றும் தி.மு.க.வினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியம் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் கனிம வளத்துறையை சேர்ந்த தனியார் நிறுவனம் இரும்பு தாது எடுக்க இருப்பதாகவும், 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட விளைநிலத்தை கையகப்படுத்த இருப்பதாகவும் கூறி, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வு சம்பந்தமாக அந்த பகுதியில் உள்ள விவசாயிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் போன்றவர்களுக்கு எவ்விதமான அறிவிப்பும் இல்லை. இது சம்பந்தமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழப்பமான நிலையிலும், என்ன செய்வதென்று தெரியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், பதற்றமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் இந்த நிறுவனம் கனிம வளம் எடுக்கும் பணியினை தொடங்குவதாக தெரிகிறது. தனியார் நிறுவனம் இரும்பு தாது எடுக்கும் பணியினை தொடங்கும் பட்சத்தில், இந்த பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொத்துகளை இழப்பதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வெளியூர் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும்.

இந்த திட்டம் மூலம் விவசாயிகள், பண்ணை தொழில், விசைத்தறி கூடங்கள் உள்பட தொழில்கள் மூலம் சுமார் 1½ லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த பாதிப்பால் வெள்ளகோவில் பகுதி பாதிக்கப்படுவது மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்தின் பொருளாதாரமே பாதிக்கும். எனவே இது தொடர்பாக விசாரித்து, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். விளை நிலங்கள் கையகப்படுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Next Story