மோட்டார் சைக்கிள்கள் விபத்தில்: பனியன் நிறுவன உரிமையாளர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் விபத்தில்: பனியன் நிறுவன உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 9 July 2018 10:32 PM GMT (Updated: 9 July 2018 10:32 PM GMT)

குன்னத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பனியன் நிறுவன உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குன்னத்தூர், 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 28). இவர் குன்னத்தூர் துணை மின் நிலையம் அருகே சிறிய அளவில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு தனது பனியன் நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார் சென்றுகொண்டிருந்தார்.

குன்னத்தூர்-ஆதியூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் செந்தில்குமார் சென்ற போது, எதிரே கருணாம்பதி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்(42) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜமாணிக்கம் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் விபத்தில் பலியான செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story