சாலை மறியலில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 197 பேர் கைது


சாலை மறியலில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 197 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:16 AM IST (Updated: 10 July 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில், சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 197 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 


ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்களை எவ்வித விளக்கமும் இன்றி பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பல்லடம் சாலையில், அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 197 பேரை கைது செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story