கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்குவதாக கூறி கலெக்டரிடம் மனு
கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்குவதாக கூறி 500, 2,000 ரூபாய் நோட்டுகளுடன் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக நெல்லிக்குப்பம் அருகே உள்ள நடுவீரப்பட்டு மற்றும் குமளங்குளம் கிராம மக்கள் வந்தனர். அவர்கள் தங்களது கையில் கோரிக்கை மனுவுடன் ஒவ்வொருவரும் 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் தண்டபாணியிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர், பணத்தை எடுத்துக்கொண்டு மனுவை மட்டும் என்னிடம் கொடுங்கள் என்றார். உடனே கிராம மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் சாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ்களை பெறவும், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கும் நாங்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டு மனு கொடுப்பவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்கிறார். சரியான அணுகுமுறை இல்லை. ஒரு மனுவை எடுத்துச்சென்றால் 10 முறை அலைக்கழிக்க வைத்துதான் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறார்.
நிலத்துக்கு வரி சான்று கேட்டால் அசல் பத்திரம் வேண்டும் என்கிறார். அசல் பத்திரம் வங்கியில் உள் ளது. இதனால் எங்களுக்கு நிலவரி ரசீது கிடையாது, அடங்கல் தர மறுப்பதால் நெல், கரும்பு, வாழை போன்றவற்றுக்கு கடன் வாங்க விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அனைத்து இடங்களிலும் முகவர்கள் அமைத்து அவர்கள் மூலம் சான்றிதழ்களுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிபட்சம் ரூ.10 ஆயிரம் வரை கிராம மக்களிடம் வசூல் செய்கிறார். மின் இணைப்பு பெறுவதற்கு அசல் பத்திரம் கொடுத்த பின்னரும் சான்றிதழ் தர மறுப்பதால் மின் இணைப்பு பெற முடியவில்லை. அவர் சாதி மற்றும் அரசியல் கட்சியின் அடிப்படையில் பொதுமக்களை வேறுபடுத்தி நடத்துவதால் சாதி கலவரம் உருவாகும் அபாய நிலை உள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலரை இட மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை படித்து பார்த்த கலெக்டர் தண்டபாணி, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story