ரூ.85 லட்சத்தை கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்


ரூ.85 லட்சத்தை கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 10 July 2018 4:37 AM IST (Updated: 10 July 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் பகுதியில் மக்காச்சோளம் கொள்முதல் செய்து கொடுத்ததற்கான ரூ.85 லட்சத்தை கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர், 


விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). வியாபாரியான இவர், விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை மொத்தமாக கொள்முதல் செய்து, நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்து வந்தார்.

அந்த வகையில் மணிகண்டனுக்கு, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சபரிநாதன்(37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை 1,250 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொடுத்தால், அதில் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தருவதாக சபரிநாதனிடம், மணிகண்டன் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து சபரிநாதன் அருகில் உள்ள பெரியநெசலூர், நிராமணி, விளம்பாவூர், சிறுநெசலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளிடம் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். மேலும் ரூ.15 லட்சம் மதிப்பில் கார் ஒன்றையும் மணிகண்டனுக்கு வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக மக்காச்சோளம் கொடுத்த விவசாயிகளுக்கு ரூ.85 லட்சம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரிநாதன் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் மணிகண்டனுக்கு திருமணம் முடிந்து, சென்னையில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மேலும் தனது மனைவியுடன் அவர் புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்தது தெரிந்தது.

இதையடுத்து வேப்பூர் போலீசார் சென்னைக்கு சென்று அங்கிருந்த மணிகண்டனை பிடித்து வேப்பூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் விவசாயிகளுக்கு முதற் கட்டமாக ரூ.20 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த சபரிநாதனை மணிகண்டன் வழிமறித்தார். அப்போது அவர், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் பணம் தரமுடியாது என கூறி அவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். 

Next Story