மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 1 வயது குழந்தை தலை நசுங்கி பலி + "||" + Government bus collision on motorcycle; A 1-year-old child is head crushed

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 1 வயது குழந்தை தலை நசுங்கி பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 1 வயது குழந்தை தலை நசுங்கி பலி
கடலூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெற்றோர் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக இறந்தது.
கடலூர், 

கடலூரை அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள உள்ளேரிப்பட்டு மெயின்ரோட்டை சேர்ந்தவர் கருணாமூர்த்தி(வயது 35) தொழிலாளி. இவருடைய மனைவி இலக்கியா(28). இவர்களின் மகன்கள் கார்த்தி(3), நகுல்(1) ஆகியோருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கருணாமூர்த்தி, தனது மனைவி இலக்கியாவுடன், 2 மகன்களையும் சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் கருணாமூர்த்தி குடும்பத்துடன் நெல்லிக்குப்பத்தில் உள்ள இலக்கியாவின் பெற்றோர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி 4 பேரும் மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பம் நோக்கி புறப்பட்டனர்.

இதில் குழந்தை நகுலை இலக்கியா தனது மடியிலும், கார்த்தியை கருணாமூர்த்தி தனக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அமர வைத்திருந்தனர். கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இதனை மோட்டார் சைக்கிளில் இருந்தபடி 2 பேர் பார்த்துக்கொண்டிருந்தனர். உடனே கருணாமூர்த்தி, அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை வலதுபுறம் திருப்பினார். அந்த சமயத்தில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் கருணாமூர்த்தி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறியதில் கருணாமூர்த்தி, இலக்கியா, கார்த்தி ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளின் இடது புறம் கீழே விழுந்தனர். குழந்தை நகுல், வலது புறம் விழுந்ததில் அவனது தலை மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி, நகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதைபார்த்து கருணாமூர்த்தியும், இலக்கியாவும் கதறி அழுதனர். மேலும் அருகில் இருந்தவர்களும் அங்கு திரண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தை நகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் விபத்துக்கு காரணமான பள்ளத்தை பொக்லைன் எந்திரம் மூலம் மண்போட்டு மூடினர். 

ஆசிரியரின் தேர்வுகள்...