8-ம் நூற்றாண்டை சேர்ந்த 2-ம் நந்திவர்மன் கால நடுகல் கண்டெடுப்பு
ஆவூர் அருகே 8-ம் நூற்றாண்டை சேர்ந்த 2-ம் நந்திவர்மன் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அருகே காட்டுமலையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மதில் சுவருக்கு பின்புறம் ஒரு சிலை இருப்பதாக அங்கு பணிபுரியும் ஆசிரியை ஜெயபிரியா அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சேர்ந்த ராஜ்பன்னீர்செல்வம், மணிகண்டன், மோகன் அடங்கிய வரலாற்று ஆர்வலர் குழுவினர் அதனை ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
சுமார் 4 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் இரு வீரர்களின் உருவம் புடைப்பு சிற்பமாக 5 வரி கல்வெட்டுடன் காணப்படும் இந்த நடுகல் பல்லவ மன்னன் 2-ம் நந்திவர்மனின் (கி.பி. 730-795) 61-வது ஆட்சி ஆண்டு, அதாவது கி.பி 791-ம் ஆண்டை சேர்ந்த நடுகல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோல பல்லவர் காலத்திய நடுகல்கள் செங்கம் பகுதியில் ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த பகுதியும் பல்லவர்களின் கீழ் இருந்தமையை உறுதி செய்ய முடிகிறது.
பலகைகல்லில் 5 வரி கல்வெட்டுடன் புடைப்பாக இங்கே காட்டப்பட்டுள்ள இரு வீரர்களும் தந்தை, மகனாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது. ‘மணியன்னாரம் மகன் இடரன்’ என்ற கல்வெட்டு வரியின் குறிப்பு மூலம் அறியலாம்.
மேலும் 1,200 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த ஊர் மலையனூர் என்றே வழங்கபட்டுள்ளது என்பதையும் இக்கல்வெட்டு நமக்களிக்கும் சிறப்பு செய்தியாகும். வலது பக்கம் தந்தை போல உள்ள முதியவர் இடது கையில் உருவிய நிலையில் குருவாளும், வலது கையில் வில்லும் ஏந்திய நிலையில் தனது வலது காலை சிறிய கல் போன்ற பீடத்தின் மீது வைத்து காட்சி தருகிறார்.
இடது பக்கம் மகன் போன்ற தோற்றத்தில் உள்ள சிறிய உருவத்தின் இடது கை அம்பு செலுத்திய நிலையிலும், வலது கை வில்லேந்திய நிலையில், தலையில் குடுமியுடன் காட்சி தருகிறார். கல்வெட்டுக்கள் ஆங்காங்கே சிதைந்தும் கடைசி வரிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளதால் இந்த இருவரும் எதன் பொருட்டு ஊருக்காக உயிர் நீத்தார்கள் என்று விவரம் சரியாக அறிய முடியவில்லை.
எனினும் இந்த பகுதியில் கிடைக்கும் நடுகற்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் காட்டு விலங்குகளிடம் இருந்து ஊரை காப்பாற்றும் பொருட்டோ அல்லது போரிலோ உயிர் நீத்திருக்கக் கூடும் என்று தெரியவருகிறது.
இவ்வூரில் வேறு பழங்கோவில்களோ, கல்வெட்டோ இல்லாத நிலையில் இந்த நடுகல்லை சுற்றி உள்ள இடத்தில் ஏராளமான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் காணப்படுவதால் இந்த ஊர் பண்டைய மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.
தற்போது ஊர் மக்கள் இந்த நடுகல்லை ‘வேடியப்பன்’ என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் உள்ள 1,200 ஆண்டு பழமையான இந்த நடுகல்லை கூரை அமைத்து பாதுகாத்திட திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு மூலம் வழிபடுவோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதற்கு, மக்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story