வேலூரில் காற்றுடன் பலத்த மழை மா மரம் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது


வேலூரில் காற்றுடன் பலத்த மழை மா மரம் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது
x
தினத்தந்தி 10 July 2018 6:05 AM IST (Updated: 10 July 2018 6:05 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சத்துவாச்சாரியில் பழமை வாய்ந்த மாமரம் மற்றும் தென்னை மரம் சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

வேலூர், 


கோடைகாலம் முடிந்தும் வேலூரில் பகல்நேரங்களில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அவ்வப்போது வானத்தில் மேகங்கள்திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. வேலூர் தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேல் மழை நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியில் டபுள்ரோடு உள்ளது. இங்கு பழமை வாய்ந்த ஒற்றை மாமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் நின்றிருந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அந்த மாமரம் சாய்ந்து, மின்கம்பங்களில் விழுந்து, அருகில் இருந்த பால் பூத், சைக்கிள் கடை ஆகியவற்றின் மீது விழுந்தது.

அந்த நேரத்தில் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் பணியில் 2 தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். நல்ல வேளையாக அவர்கள் காயங்களின்றி உயிர்தப்பினர். மின்கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் வயர்கள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மின் தொழிலாளர்கள் மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இந்த மாமரம் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்களுக்கு ஒரு அடையாளமாக திகழ்ந்தது. ‘ஒண்டி மாங்காய் மரம்’ என்று தான் இதனை மக்கள் அழைப்பார்கள். தற்போது இந்த மரம் பட்டுப்போனாலும் கம்பீரமாக காட்சி அளித்தது. இப்பகுதிக்கு ஒரு அடையாளமாக இம்மரம் திகழ்ந்தாலும், இதனால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று கருதி இதனை அகற்ற அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். எனினும் நடவடிக்கை இல்லை. இன்று (நேற்று) பெய்த மழையில் மரம் விழுந்து விட்டது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றனர்.

இதேபோல வேலூர் கஸ்பா வசந்தபுரத்தில் சம்பத்நகரில் ஒரு வீட்டில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று பலத்த காற்றால் திடீரென வேரோடு சாய்ந்து பெட்டிக் கடை மீது விழுந்தது. இதில் கடையில் இருந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள், விளம்பர பேனர்கள் கீழே விழுந்தது. ஒரு சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இந்த மழையால் இரவு குளிர்ந்த காற்று வீசியது. 

Next Story