செவ்வாய் கிரகமாக மாறும் ஓமன் பாலைவனம்..!


செவ்வாய் கிரகமாக மாறும் ஓமன் பாலைவனம்..!
x
தினத்தந்தி 10 July 2018 10:28 AM GMT (Updated: 10 July 2018 10:28 AM GMT)

செவ்வாய், மனிதனின் விண்வெளி குடியிருப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கோள்.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதற்காக நாசா ஒருபுறம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வர, அரபு நாடான ஓமன் பாலைவனத்திலும் சில நாடுகள் செவ்வாய் பயண ஆராய்ச்சி முகாம் அமைக்கப்பட்டு பல்வேறு ஒத்திகைகள் நடத்தி வருகின்றன. அதில் சில மைல்கல் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதுபற்றி பார்க்கலாம்...

பூமியில் இருந்து ஏறத்தாழ 41 கோடி கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு அப்பால் உள்ளது செவ்வாய். உலகில் செவ்வாய்கிரக ஆராய்ச்சி மற்றும் மனித பயண திட்டத்திற்காக 32 உலக நாடுகள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட மேலை நாடுகள் மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளான அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளும் தங்கள் ஆராய்ச்சி திட்டங்களை ஏற்கனவே தொடங்கி உள்ளன. நாசா விஞ்ஞானிகள் வரும் 2020-ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கான பிரத்தியேக பயிற்சி, ஒத்திகையில் கடந்த சில ஆண்டுகளாகவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நாசாவின் செவ்வாய் மனித பயணம் சாத்தியமானால் 2030-ல் செவ்வாயில் மனித குடியேற்றத்தை உருவாக்குவதுதான் அவர்களின் இலக்கு.

இதுபோன்ற ஒத்திகை ஆராய்ச்சி சில மாதங்களுக்கு ஓமன் நாட்டிலும் தொடங்கியது. செவ்வாயின் சிவந்த மணற்பரப்பிற்கு நிகரான தன்மையுடன் விளங்கும் ஓமன் பாலைவனப் பகுதியில் பன்னாட்டு விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

ஓமன் நாட்டின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது டோபர் பாலைவனம். விண்வெளியில் இருந்து பார்த்தால் பழுப்பு பரப்பாக தோற்றமளிக்கும். இங்கு சில விலங்கினங்களும், தாவரங்களும் மட்டும் வாழ்கின்றன. 51 டிகிரி செல்சியஸ் (125 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலை நிலவுவதால் வெயில் கொளுத்தும்.

செவ்வாயின் தகவமைப்புடன் பல்வேறு சூழல்கள் இந்த பாலைவனத்தில் ஒத்துப்போவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக பாலைவன பரப்பு செவ்வாய் மேற்பரப்பு போலவே உள்ளது. வண்டல் மண் படிவுகள், உப்பு படுகைகள் மற்றும் பழமையான ஆற்றுப் படுகைகள் செவ்வாய் சூழலை நினைவு படுத்துகின்றன. பரந்து விரிந்திருக்கும் மணல் மற்றும் பாறை பரப்புகள் செவ்வாய் பரிசோதனைக்கு ஏற்றது என ஆய்வாளர்களால் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இங்கு முகாம் அமைத்து கடந்த பிப்ரவரி முதல் செவ்வாய்ப் பயண ஒத்திகை ஆராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. இதற்காக 2.4 டன் எடையில், அரைக்கோள வடிவிலான குடில் மற்றும் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே மாதிரியிலான குடியிருப்புகள்தான் செவ்வாயில் உருவாக்கப்பட உள்ளது என்பது இங்கே நினைவூட்டத்தக்கது. இந்த ஆய்வக பகுதி ‘ஓமன் மார்ஸ் பேஸ்’ எனப்படுகிறது.

விண்வெளி வீரர்களின் அன்றாட தேவைகள், உயிர் வாழ தேவையான தகவமைப்புகள் மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் செய்யும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஆஸ்திரியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை சேர்ந்த 16 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வுகளை நடத்துவதற்காக முகாமிட்டுள்ளனர். நேரடியாக அல்லாமல் உலகின் பல்வேறு நாட்டு ஆய்வகங்களில் இருந்தும் இந்த ஆய்வுப் பணிகளில் சுமார் 200 விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரோபோ உலவிகள், குடியிருப்பு ஆய்வகம், டிரோன்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் 19 வகையான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக செவ்வாயில் நிலவும் சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அது மனித உடலில் எத்தகைய தாக்கத்தை ஏற் படுத்துகிறது, அங்கு உணவு விளைவிக்க முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முக்கியமானவையாகும்.

செவ்வாய்கிரக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்திரியா வீரர்கள் கவச உடைகளை தாங்கி நடந்து ஆய்வு செய்தனர். மண், கல் மாதிரிகளை எப்படி சேகரிப்பது என்பதற்கான ஒத்திகைகளும் முடிந்துள்ளன. கவச உடை மற்றும் விண்வெளி காலணிகளை செவ்வாய் நிலப்பரப்பில் பதித்து நடப்பதில் சிரமம் உள்ளதா? அதை தவிர்ப்பது எப்படி என்பதற்கு இந்த ஆய்வு கைகொடுக்கும். நிலப்பரப்பு மற்றும் காலநிலைகளை குறித்த தகவல்களை அனுப்பும் ரோபோ வாகனம் ஒன்றும் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. அந்த வாகனத்தில் கேமரா பொருத்தப்பட்டு நிலப் பரப்புகள் படம் எடுத்து கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் அனுப்பும் பணி தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.

6 மாத ஆராய்ச்சியின் பயனாக சில காய்கறிகளும் ஆய்வகத்தில் விளைவிக்கப்பட்டுள் ளன. செவ்வாய் கிரகத்தில் உள்ளதுபோல மாதிரி மண் உருவாக் கப்பட்டு, கட்டுப் படுத்தப்பட்ட சூழலில் காய்கறிகள் பயிரிடப்பட்டது. ‘ராம்போ ராடிஷ்’ எனப்படும் சிவப்பு நிறமுள்ள முள்ளங்கி மற்றும் தண்ணீரில் வளரும் வாட்டர் கிராஸ் என்னும் கீரை வகை ஆகிய பயிர்கள் ஆய்வக சூழலில் திசு வளர்ப்பு மற்றும் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ முறையில் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டு சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களை வெறும் 15 நாட்களில் அபரிமிதமாக வளர்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தின் மண்ணில் அலுமினியம், இரும்பு, காட்மியம், துத்தநாகம் மற்றும் காரீயம் போன்ற கன உலோக தாதுக்கள் காணப்படும். விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் தேவையற்ற தாதுக்கள் மிகுந்துள்ளதா?, அவற்றால், மனிதனுக்கு ஒவ்வாமை மற்றும் விஷத்தன்மை ஏற்படுமா? என்பது போன்ற ஆய்வுகள் நடைபெறுகின்றன. காய்கறிகளில் உள்ள நீர்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்துக்கள் குறித்து சந்தேகங்கள் தீர்ந்ததும், விண்வெளி வீரர்களுக்கு இந்த காய்கறியில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் பூமியைவிட 40 மடங்கு புவியீர்ப்பு விசை குறைவாக உள்ளது. இதனால் தாவர வளர்ச்சி இதேபோல குறுகிய காலத்தில் விளைவிக்க முடியுமா? என்பது குறித்த ஆய்வுகளும் நடக்கின்றன.

சில சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தாலும் செவ்வாய் கிரகத்தில் காய்கறிகளை பயிரிட முடியும் என்பது இந்த சோதனை ஒத்திகை ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும். தற்போது செவ்வாயில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி விண்கலம் மீத்தேன் மற்றும் சில உயிர்த்தாதுக்கள் இருப்பது பற்றிய விவரங்களை சேகரித்து அனுப்பி உள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையிலும் மேலும் பல்வேறு சோதனைகள் நடக்க உள்ளன.

நாசா விஞ்ஞானிகள் கலிபோர்னியா அருகே உள்ள மோஜாவ் பாலைவன பகுதியில் இதுபோன்ற செயற்கை செவ்வாய்ச் சூழலை உருவாக்கி ஆய்வு செய்து வருவதும் குறிப் பிடத்தக்கது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமும் சிலி உள்பட பல்வேறு இடங்களில் செவ்வாய் பயண ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. வேகம் பிடித்துள்ள செவ்வாய்ப் பயண ஆராய்ச்சி களால், முதலில் செவ்வாயில் காலடி வைக்கப் போவது யார்? என் பதில் மறைமுகமாக பரபரப்பான போட்டிகள் நடப்பதே உண்மை. இதில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்! 

Next Story