மத்திய தொழில் பாதுகாப்பு படை பொன்விழா ஆண்டு: தூத்துக்குடி துறைமுகம், அனல்மின் நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி


மத்திய தொழில் பாதுகாப்பு படை பொன்விழா ஆண்டு: தூத்துக்குடி துறைமுகம், அனல்மின் நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 July 2018 3:00 AM IST (Updated: 10 July 2018 5:58 PM IST)
t-max-icont-min-icon

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பொன்விழா ஆண்டையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், அனல்மின் நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தன.

தூத்துக்குடி, 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பொன்விழா ஆண்டையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், அனல்மின் நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தன.

பொன் விழா ஆண்டு

மத்திய தொழில் பாதுகாப்பு படை கடந்த 1969–ம் ஆண்டு 3 பட்டாலியனுடன் தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பில் இந்த படையினர் பணியமர்த்தப்பட்டு வந்தனர். தற்போது இந்த படையில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 371 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த படையினர் துறைமுகம், விமான நிலையம், அனல்மின் நிலையம், அணுமின் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டு 50–வது ஆண்டு நடந்து வருகிறது.

இதையொட்டி தூத்துக்குடி என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட் (என்.டி.பி.எல்) அனல்மின் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. உதவி கமாண்டர் சோகன்லால் தலைமை தாங்கி மரக்கன்று நட்டினார். தொடர்ந்து அனல்மின் நிலைய வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

வ.உ.சி. துறைமுகம்

இதே போன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வளாகத்தில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு துணை கமாண்டர் மார்க்கண்டேய மிஸ்ரா தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சியில் திரளான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டு துறைமுக வளாக பகுதிகளில் 500 மரக்கன்றுகளை நட்டினர்.


Next Story