கோவில்பட்டி அருகே சோகம் தலையாரி தூக்குப்போட்டு தற்கொலை அதிர்ச்சியில் தங்கையும் உயிரிழந்தார்


கோவில்பட்டி அருகே சோகம் தலையாரி தூக்குப்போட்டு தற்கொலை அதிர்ச்சியில் தங்கையும் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 11 July 2018 3:15 AM IST (Updated: 10 July 2018 7:19 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தலையாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவருடைய தங்கையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே தலையாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவருடைய தங்கையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

தலையாரி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பஞ்சாயத்து சண்முகா நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் திருப்பதி (வயது 37). இவர் கோவில்பட்டி அருகே தோணுகாலில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக உதவியாளராக (தலையாரி) வேலை செய்து வந்தார். அப்போது அவர் சரியாக வேலைக்கு செல்லாததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருப்பதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வரையிலும் திருப்பதி தனது அறையில் இருந்து வெளிவரவில்லை. எனவே இரவில் பெற்றோர் திருப்பதியின் அறையில் சென்று பார்த்தபோது, திருப்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறினர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த திருப்பதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருப்பதியின் தங்கையான கற்பகவல்லி (31) ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை அரசரடி குமாரபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜாமித்ரன். கற்பகவல்லி இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதிர்ச்சியில் தங்கை சாவு

திருப்பதி தற்கொலை செய்தது குறித்து, அவருடைய தங்கை கற்பகவல்லிக்கு உறவினர்கள் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அப்போது ராஜாமித்ரன் வேலைக்கு சென்று இருந்தார். உடனே கற்பகவல்லி தன்னுடைய கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடைய அண்ணன் இறந்தது குறித்து அழுதவாறு கூறினார். அப்போது அதிர்ச்சியில் கற்பகவல்லி திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே ராஜாமித்ரன் தனது வீட்டுக்கு விரைந்து சென்று, தன்னுடைய மனைவியை சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு கற்பகவல்லியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த கற்பகவல்லியின் உடலை இரவில் கோவில்பட்டி சண்முகா நகருக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்கு நடத்தினர்.

பெரும் சோகம்

தொடர்ந்து நேற்று திருப்பதியின் உடலை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் திருப்பதியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்தினர்.

அண்ணன் தற்கொலை செய்ததை அறிந்த தங்கை அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story