நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது


நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 10 July 2018 9:00 PM GMT (Updated: 10 July 2018 2:37 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தாலுகாவில் உள்ள அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி உடனே தீர்வு காணப்படும்.

இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், உழவர் பாதுகாப்பு அட்டை குறித்தும், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை தாலுகா

நெல்லை மாவட்டத்தில் இந்த மாவட்டத்திற்கான அம்மா திட்ட முகாம் வருகிற 13–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நெல்லை தாலுகா கங்கைகொண்டான்–1, பாளையங்கோட்டை தாலுகா மேலநத்தம், சங்கரன்கோவில் தாலுகா குலசேகரமங்கலம், தென்காசி தாலுகா தென்காசி, செங்கோட்டை தாலுகா இலத்தூர், சிவகிரி தாலுகா சங்கனாப்பேரி, வீரகேரளம்புதூர் தாலுகா வடக்கு காவலாக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

ஆலங்குளம் தாலுகா மடத்தூர், அம்பை தாலுகா அயன்திருவாலீஸ்புரம், நாங்குநேரி தாலுகா உன்னங்குளம், ராதாபுரம் தாலுகா பழவூர் பகுதி1, 2, கடையநல்லூர் தாலுகா திருமலைநாயக்கன்புதுக்குடி, மேலப்புளியங்குடி, திருவேங்கடம் தாலுகா பெருங்கோட்டூர், மானூர் தாலுகா மாவடி, சேரன்மாதேவி தாலுகா தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம் ஆகிய ஊர்களில் அம்மா திட்டமுகாம் நடக்கிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story