கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்,
தமிழ்நாட்டில் புதிய சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வேலூரில் இருந்து சென்னைக்கு 13 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 8 பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழகம் முழுவதும் இந்த புதிய சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சொகுசு பஸ்களில் கண்டக்டர் இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் வேலூரில் புறப்பட்டு சென்னையில் தான் நிற்கும். இடையில் நிற்பதோ, பயணிகளை ஏற்றுவதோ கிடையாது. வேலூரில் புறப்படும்போது பஸ்நிலையத்திலேயே டிக்கெட் வழங்கி விடுவார்கள். சென்னையில் இருந்து புறப்படும்போது சென்னையிலேயே டிக்கெட் வழங்கி விடுவார்கள். இதனால் புதிதாக இயக்கப்படும் சொகுசு பஸ்களில் கண்டக்டர்கள் இருக்கமாட்டார்கள்.
கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்து நேற்று வேலூர் மண்டித்தெருவில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். எல்.பி.எப். நிர்வாக பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், சி.ஐ. டி.யு. சந்திரசேகரன், பரசுராமன், பாட்டாளி தொழிற்சங்கம் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதன் மூலம் போக்குவரத்து கழகத்தில் அரசு மறைமுகமாக ஆள்குறைப்பு செய்வதாகவும், கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்கினால் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் எனவே கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்களை இயக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story