மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் எட்டின்ஸ் சாலை வாகன ஓட்டிகள் பீதி


மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் எட்டின்ஸ் சாலை வாகன ஓட்டிகள் பீதி
x
தினத்தந்தி 10 July 2018 10:15 PM GMT (Updated: 10 July 2018 6:39 PM GMT)

ஊட்டியில் மண் சரிவால் எட்டின்ஸ் சாலை அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேரிங்கிராஸ் பகுதிக்கு எட்டின்ஸ் சாலை செல்கிறது. இந்த நிலையில் மவுண்ட்டோபன் விடுதி செல்லும் சாலையின் ஒரு பகுதியில் கடந்த மே மாதம் பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையின் ஒரு பகுதி பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் சாலைக்கு அடியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை அந்தரத்தில் ஆபத்தான நிலையில் தொங்குகிறது.

ஊட்டியில் தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கிறது. இதற்கிடையே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் மண் சரிந்து கீழே விழுந்து வருகிறது. நடைபாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்து அபாயகரமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்று வருகிறார்கள். அப்பகுதியில் சாலையோரத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இருந்தபோதிலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

எட்டின்ஸ் சாலை வழியாக ஊட்டி ரோஜா பூங்கா, எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றன. மேலும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஏ.டி.சி., ரோஜா பூங்கா சந்திப்பு, எட்டின்ஸ் சாலை வழியாக சேரிங்கிராசை கடந்து மற்ற இடங்களுக்கு சென்று வருகின்றன. அதிக எடைகளை ஏற்றிக்கொண்டு லாரிகளும் செல்கிறது.

ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எட்டின்ஸ் சாலையில் மேலும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த சாலை அந்தரத்தில் தொங்குவதுடன், ஆபத்தான சாலையாக காட்சி அளித்து வருகிறது. சரக்கு வாகனங்கள் இப்பகுதியில் சென்று வருவதால், சாலை பலம் இழக்கும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுக்கினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஊட்டி வால்சம்பர் சாலைக்கு செல்லும் நடைபாதை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் எழுந்து உள்ளது. எனவே, மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்க ஊட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story