பறக்கையில் துணிகரம் 1¾ அடி உயர ஐம்பொன் அம்மன் சிலையை தூக்கிச் சென்ற கும்பல்


பறக்கையில் துணிகரம் 1¾ அடி உயர ஐம்பொன் அம்மன் சிலையை தூக்கிச் சென்ற கும்பல்
x
தினத்தந்தி 11 July 2018 4:30 AM IST (Updated: 11 July 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பறக்கை யில் உள்ள அம்மன் கோவிலின் கதவை உடைத்து திறந்து 1¾ அடி உயர ஐம்பொன் அம்மன் சிலையை தூக்கிச் சென்றதுடன், தங்க நகையையும் கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பறக்கை பகுதியில் அளிசங்காட்டு விளையில் தேவி முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலை-மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். தற்போது அந்த கோவிலில் திருப்பணிகளும் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவில் பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலை திறக்க சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கோவிலின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.

கருவறையில் இருந்த 1¾ அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் தெரிவித்தார்.

உடனே அங்கு பக்தர்கள் திரண்டனர். மேலும் கோவிலில் இருந்த 1½ பவுன் நகை, பித்தளை சூலாயுதம் ஆகியவற்றையும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நள்ளிரவில் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் ஐம்பொன் சிலையை தூக்கிச் சென்றதுடன், தங்க நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததும், அந்த பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிலில் ஐம்பொன் சிலை மற்றும் தங்க நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story