மகா தீபம் ஏற்றும் மலையில் 3 நாள் சிக்கி தவித்த வாலிபர்


மகா தீபம் ஏற்றும் மலையில் 3 நாள் சிக்கி தவித்த வாலிபர்
x
தினத்தந்தி 10 July 2018 9:45 PM GMT (Updated: 10 July 2018 7:02 PM GMT)

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலையில் 3 நாள் சிக்கி தவித்த வாலிபரை போலீசார் மீட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடைபெறும். அப்போது நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். இது மட்டுமின்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்த மலையை கிரிவலம் செல்கின்றனர்.

இந்த மலையில் ஏறக்கூடாது என்றும், கிரிவலப்பாதையின் உள்வட்ட பாதையில் செல்லக்கூடாது என்றும், மீறி செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் மறைமுகமாக இந்த மலையில் ஏறுகின்றனர். மேலும் உள்வட்ட பாதையிலும் செல்கின்றனர்.

இந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தருண் (வயது 25) என்ற வாலிபர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 8-ந் தேதி வந்தார். அவர் கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்திற்கு சென்றார். இதையடுத்து காலை 11 மணியளவில் திடீரென 2,668 அடி உயர மகா தீப மலையை சுற்றி பார்ப்பதற்காக ஏறினார்.

கந்தாஸ்ரமத்தை கடந்து சென்ற அவர் திடீரென மலையில் ஒரு இடத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சிறிது தூரம் உருண்டு சென்று உள்ளார். இதனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு வந்த பாதை எது என்று தெரியவில்லை. பின்னர் தொடர்ந்து அவர் மலை பகுதியில் நடந்து சென்றார். அன்று இரவு இருட்டியதால் பயந்து போன அவர் செல்போன் மூலம் தனது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தருணின் செல்போனில் டவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தருணின் தந்தை வெங்கடேஸ்வரன் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திற்கு தொடர்பு கொண்டு மகன் தருணை காப்பாற்றும்படி கூறியுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தருணை கண்டுபிடிக்க வனத்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 20-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் மலையேற தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் தருணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அங்குள்ள பள்ளத்தில் விழுந்து கிடந்த தருணை போலீசார் மீட்டனர். இதையடுத்து அவர்கள் மலையில் இறங்கினர்.

நேற்று காலை சுமார் 10 மணியளவில் தருணை போலீசார் மலையில் இருந்து கீழே அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை போலீசார் முதலுதவிக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் மலையில் ஏறியது தொடர்பாக தருணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story