கந்துவள்ளி கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்து 4 காட்டுயானைகள் அட்டகாசம்


கந்துவள்ளி கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்து 4 காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 10 July 2018 9:30 PM GMT (Updated: 10 July 2018 7:20 PM GMT)

கந்துவள்ளி கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்து 4 காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், காபி செடிகள் நாசமாகின.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ளது கந்துவள்ளி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 4 காட்டுயானைகள் வெளியேறின. பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த சிவப்பா, மஞ்சுநாத் ஆகியோரின் விவசாய தோட்டத்திற்குள் அந்த காட்டு யானைகள் புகுந்தன. மேலும் அங்கு பயிரிடப்பட்டிருந்த காபி செடிகள் மற்றும் வாழை மரங்களை காட்டுயானைகள் மிதித்து நாசப்படுத்தின. பின்னர் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

இந்தநிலையில் நேற்று காலையில் சிவப்பா, மஞ்சுநாத் ஆகியோர் தங்களது தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது காட்டுயானைகள் வாழை மரங்கள், காபி செடிகளை நாசப்படுத்தி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆல்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி பொதுமக்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ரஞ்சித் நிருபர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்றுத் தரப்படும். மேலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் அந்தப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

Next Story