23 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜப்தி


23 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜப்தி
x
தினத்தந்தி 11 July 2018 4:30 AM IST (Updated: 11 July 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறைக்கு 23 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் தளவாடப்பொருட்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

ராசிபுரம்,

சேலம்-கரூர் அகல ரெயில்பாதை திட்டத்திற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவைச் சேர்ந்த நெ.3 குமாரபாளையம், கீரனூர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், ராஜசேகரன், பொன்னுசாமி, ஜெயகுமார் உள்பட 23 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு அரசு வழங்கிய இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என்று கூறி, ரூ.11 கோடியே 52 லட்சத்து 2 ஆயிரத்து 258-ஐ இழப்பீடாக ரெயில்வே துறை மற்றும் நில எடுப்பு தாசில்தார் அலுவலகம் வழங்க வேண்டும் என்று கோரி ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 23 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும்படி கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இழப்பீடு தொகை வழங்காததால் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர்.

ரெயில்பாதை திட்டத்திற்கு நிலம் எடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை என்பதால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், ரெயில்வே துறைக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.15 லட்சம் மதிப்புள்ள டிராலி ஆகியவற்றை ஜப்தி செய்யவும், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ரூ.14 லட்சம் மதிப்புள்ள 2 ஜீப்கள் உள்பட ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தாசில்தார் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி, ராசிபுரம் ரெயில் நிலையம், நாமக்கல்லில் உள்ள நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்திற்காக ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வாகனங்களையும், கம்ப்யூட்டர் உள்பட பொருட்களையும் ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர் சென்றார். அப்போது அதிகாரிகள், கால அவகாசம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டதால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் சார்பு நீதிபதி பிரபா சந்திரன் நேற்று முன்தினம் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தளவாட பொருட்கள் மற்றும் வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு கிடைக்காத சுப்பிரமணி, பெரியசாமி, ராஜசேகரன் ஆகியோருடன் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ராசிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாததால் அங்கிருந்த மேஜைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அங்கிருந்த தளவாட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டுக்கு கொண்டு வர தாலுகா அலுவலகத்தின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த ஜப்தி நடவடிக்கை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story