மாவட்ட செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பரமக்குடி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி முடக்கம் + "||" + Elimination of MLA Paramakudi block development fund is Rs 2 crore freezing

சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பரமக்குடி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி முடக்கம்

சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பரமக்குடி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி முடக்கம்
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால். தொகுதி மேம்பாட்டு நிதி தொகுதி மக்களின் தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளில் தேவையான முக்கிய பணிகளை செய்திடவும், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசின் சார்பில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் 21 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

3 கட்டங்களாக வழங்கப்படும் இந்த ரூ.2 கோடி நிதியை கொண்டு வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் வரையறுக்கப்படாத நிதி ஆகிய பிரிவுகளில் பணிகள் மேற்கொள்ளலாம். வரையறுக்கப்பட்ட நிதியில் அரசால் குறிப்பிடப்பட்ட முன்னுரிமை பணிகளையும், வரையறுக்கப்படாத நிதியில் சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பப்படி வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டபடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் வழங்கல், சமையலறை கட்டிடங்கள், வகுப்பறை கட்டிடங்கள், சத்துணவு மைய கட்டிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள், தெருவிளக்கு, சாலைகள் அமைத்தல், சுற்றுச்சுவர், பள்ளி கட்டிடங்கள், நிழற்கூரை, பாலங்கள், சுடுகாடு அமைத்தல், கழிப்பறை கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களில் பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் ஆவார். இதன்காரணமாக பரமக்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் எந்த பணிகளுக்கும் பயன்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. மேலும், இந்த நிதி ஆண்டிற்கான முதல்கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் முடங்கி போய் உள்ளது. பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் யூனியன்களுக்குட்பட்ட 116 ஊராட்சிகளும், 461 குக்கிராமங்களும் அடங்கி உள்ளன.

இந்த பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மாற்று ஏற்படாக மாவட்ட கலெக்டரின் இடைவெளி நிரப்பு நிதி, பொது நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி, மாவட்ட ஊராட்சி நிதியின்கீழ் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.