ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் போட்டி; வாலிபர் படுகொலை
நம்பியாற்று மணலை கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தோட்டத்துக்குள் பதுங்கி இருந்தவரை அண்ணன்-தம்பி தீர்த்துக்கட்டினர்.
நாங்குநேரி,
நாங்குநேரி அருகே நடந்த இந்த பயங்கர கொலை பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுப்பையா (வயது 24) கூலி தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை ஊருக்கு அருகே உள்ள ஜீயர்குளம் காலனி பகுதியில் ஒரு தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு 2 பேர் அரிவாள்களுடன் வந்தனர்.
அவர்கள் ஆக்ரோஷமாக வருவதை கண்ட சுப்பையா, தன்னை வெட்டுவதற்குத்தான் வருகிறார்கள் என்பதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த 2 பேரும் சுப்பையாவை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுப்பையாவின் கழுத்து, தொடை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அந்த தோட்டத்திலேயே சுப்பையா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த 2 பேரும் அங்கிருந்து அரிவாள்களுடன் சாவகாசமாக தப்பிச் சென்றனர்.
ஜீயர்குளம் காலனி பகுதியில் உள்ள தோட்டத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் சுப்பையாவின் உறவினர்களும் அங்கு திரண்டனர். இதனால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சுப்பையா உடலை மீட்ட நாங்குநேரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சுப்பையாவும், அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு (35) என்பவரும் கூலி வேலை செய்து வந்தனர். ஆனாலும் இருவரும் சேர்ந்து நம்பியாற்றில் மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுக்கு இடையே மணல் கொள்ளையடிப்பதில் போட்டி ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் தனித்தனியாக மணல் கொள்ளையில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். சுப்பையா, சுடலைக்கண்ணு, அவருடைய தம்பி ஆறுமுகம் ஆகிய 3 பேர் மீதும் மணல் கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் சுடலைக்கண்ணுவின் ஆதரவாளர் ஒருவரது வீடு சூரங்குடியில் உள்ளது. அந்த வீடு சூறையாடப்பட்ட வழக்கில் சுப்பையா கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து இருந்தார். அதன்பிறகு மணல் கடத்தல் தொடர்பாக சுடலைக்கண்ணுவின் தம்பி ஆறுமுகத்தை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு சுப்பையாதான் காரணம் என சுடலைக்கண்ணு தரப்பினர் நினைத்தனர்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு சுப்பையா வீட்டுக்கு சுடலைக்கண்ணு சென்று தகராறு செய்தார். அப்போது சுப்பையாவுக்கும், சுடலைக்கண்ணுவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். சுடலைக்கண்ணு அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்து விட்டார்.
சிறிது நேரம் கழித்து சுப்பையா அரிவாளுடன் சுடலைக்கண்ணு வீட்டுக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த சுப்பையா, தான் வைத்திருந்த அரிவாளால் சுடலைக்கண்ணுவின் வீட்டுக்கதவில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் சுடலைக்கண்ணு புகார் செய்தார். போலீசார் மஞ்சங்குளம் கிராமத்துக்கு சென்று நடந்த விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் வருவதை அறிந்த சுப்பையா, அங்கிருந்து தப்பி ஓடி மஞ்சங்குளம் அருகே ஜீயர்குளம் காலனி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்று பதுங்கி இருந்துள்ளார்.
போலீசாரிடம் இருந்து தப்பிய சுப்பையாவை தீர்த்துக் கட்ட சுடலைக் கண்ணு, அவருடைய தம்பி ஆறுமுகம் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். ஜீயர்குளம் காலனி பகுதியில் சுப்பையா பதுங்கி இருப்பதை அறிந்த இருவரும் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த தோட்டத்துக்கு சென்றுள்ளனர். இவர்களை கண்டதும் சுப்பையா தப்பி ஓடி உள்ளார். ஆனாலும் இருவரும் விரட்டிச் சென்று சுப்பையா அரிவாளால் சரமாரியாக வெட்டி தீர்த்துக் கட்டி உள்ளனர். இந்த கொலை தொடர்பாக சுடலைக்கண்ணு, அவருடைய தம்பி ஆறுமுகம் ஆகிய இருவரையும் நாங்குநேரி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மணல் கொள்ளையில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story