மாவட்ட செய்திகள்

அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது - திருநாவுக்கரசர் பேட்டி + "||" + Amit Shah's visit will not change anything in Tamil Nadu

அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது - திருநாவுக்கரசர் பேட்டி

அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது - திருநாவுக்கரசர் பேட்டி
அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு வாக்காளர்களை சந்தித்து எப்படி செயல்பட்டு வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி சுதர்சனநாச்சியப்பன், முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:– பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. அமித்ஷா ஒன்றும் கடவுள் இல்லை. அவர் வருகையால் அதிசயம் நடக்கப்போவதும் இல்லை. ஒரு கட்சித் தலைவர் தமிழகம் வந்துள்ளார். கட்சித் தொண்டர்களை சந்தித்து சென்றுள்ளார். இதனால் தமிழகத்தில் ஏதோ மாற்றம் வந்துவிட்டது என கூற முடியாது. பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு ஒரு கட்சி கூட தயாராக இல்லை. அந்தக்கட்சிக்கு தமிழகத்தில் அஸ்திவாரமே இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி சுவர் எழுப்ப முடியும். எப்படி ஆட்சிக்கு வர முடியும். கட்டாந்தரையில் புல் வளர்க்க பா.ஜனதாவால் முடியாது. அமித்ஷா ஒரு முறையல்ல ஆயிரம் முறை வந்தாலும் தமிழகத்தில் அவராலோ, மோடியாலோ காலூன்ற முடியாது.


இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முதலிடம் வகிக்கிறது என்று கூறுவது தவறு. தமிழ்நாடு அரசு அதிக ஊழல் செய்கிறது என கூறினால் அதில் தவறேதும் இல்லை. அதைவிடுத்து தமிழக மக்கள் ஊழல்வாதிகள் எனக்கூறுவது தவறு. இது தமிழக மக்களும் ஊழலில் ஈடுபடுவது போல் உள்ளது. தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு நடந்தால்தானே எதிர்ப்பதற்கு. இங்கு பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது. ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாமல் பா.ஜனதாஆட்சி செய்யும் ஒரே மாநிலம் தமிழகம்தான். அமைச்சர் ஜெயக்குமார் 1967–லேயே காங்கிரசுக்கு சமாதி கட்டியதாக கூறினார். அவருக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை பற்றி தெரியாது. எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் முதலில் ஆட்சியில் அமர்த்தியது காங்கிரஸ் கூட்டணிதான். மெரீனா கடற்கரையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கட்டிக்கொண்டிருக்கும் சமாதி ஜெயலலிதாவிற்கு அல்ல. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்து வந்த அ.தி.மு.க.விற்கு அவர்கள் எழுப்பும் சமாதி இது.

லோக்ஆயுக்தா சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் திருத்தம் வேண்டும் என கூறித்தான் காங்கிரஸ், தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அதுபோல் நீட் தேர்விலும் மாற்றம் தேவை. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை நடைமுறைப்படுத்தலாம் இவ்வாறு அவர் கூறினார்.