புதுவையில் இருந்து தோப்புதுறைக்கு பெருங்கடல் சாகச பாய்மரப் பயணம், கவர்னர் தொடங்கி வைத்தார்
புதுவையில் இருந்து தோப்புதுறைக்கு செல்லும் என்.சி.சி. மாணவர்களின் பெருங்கடல் சாகச பாய்மரப்பயணத்தை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
புதுவை மாநில என்.சி.சி. தலைமை அலுவலகத்தில் இருந்து ஆண்டுதோறும் மாணவ–மாணவிகள் பெருங்கடல் சாகச பாய்மரப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு முதுநிலை என்.சி.சி. மாணவ–மாணவிகள் 40 பேர் புதுவையில் இருந்து நாகப்பட்டினத்தை அடுத்த தோப்புத்துறை வரை ‘சமுத்திர பெரி’ என்ற பெயரில் பெருங்கடல் சாகச பாய்மரப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன் தொடக்க விழா நேற்று காலை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கவரனர் கிரண்பெடி கலந்து கொண்டு கொடியசைத்து சாகச பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கமாண்டர் விஜேஷ் கே கார்க், குரூப் கமாண்டர் ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் இருந்து 2 பாய்மர படகுகளில் புறப்பட்ட என்.சி.சி. மாணவ–மாணவிகள் கடலூர், பரங்கிபேட்டை, பழையாறு, பூம்புகார், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஓய்வெடுத்து தோப்புத்துறைக்கு சென்றடைவார்கள். அவ்வாறு ஓய்வு எடுக்கும் இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பின்னர் தோப்புதுறையில் இருந்து புறப்படும் அவர்கள் வருகிற 21–ந் தேதி புதுவைக்கு வந்தடைவார்கள்.