புதுச்சேரியில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற நடவடிக்கை - நாராயணசாமி உறுதி
புதுவையில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையும், அதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி அளித்த பதிலும் வருமாறு:–
அன்பழகன்: லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013–ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் சட்டத்தை இயற்றி முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் 20–க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதனடிப்படையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை சட்டசபையில் நேற்றுகொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இதில் குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் முதல்–அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், அரசின் ஆளுமைக்கு உட்பட்ட அமைப்புகள், வாரியம், நிறுவனம், கழகம் உள்ளிட்ட தலைவர்கள், உறுப்பினர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து நீதி கிடைக்க இச்சட்டம் வழி வகுக்கிறது. இச்சட்டம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல் முறைகேட்டை தடுக்க வழிவகை செய்கிறது.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு இச்சட்டத்தை கொண்டுவந்த நிலையில் புதுவை அரசும் சுப்ரீம் கோர்ட்டினுடைய உத்தரவை ஏற்காதது வியப்பாக உள்ளது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் எங்கள் நிர்வாகம் எனக்கூறி ஆட்சிபுரியும் புதுச்சேரி காங்கிரஸ் அரசும் தமிழகம் போன்று புதுச்சேரியிலும் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர அதற்காக அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
நாராயணசாமி: லோக்பால் சட்டமானது மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவைக்கு வந்தபோது அது விவாதிக்கப்பட்டு பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பல மாநிலங்களில் தற்போது லோக் ஆயுக்தா சட்டம் உள்ளது. புதுவை முழுமையான மாநிலமாக இருந்தால் நிறைவேற்றலாம். ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம். இருந்தபோதிலும் டெல்லியில் இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். எனவே புதுவையிலும் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.