ரங்கசாமியுடன் இணக்கமா? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை - நாராயணசாமி கருத்து


ரங்கசாமியுடன் இணக்கமா? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை - நாராயணசாமி கருத்து
x
தினத்தந்தி 11 July 2018 4:45 AM IST (Updated: 11 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதல் எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி சட்டமன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் முழுமையாக கலந்துகொள்வதில்லை. சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டாலும் ஒரு சில நிமிடங்கள் இருந்துவிட்டு வெளியே சென்றுவிடுவார்.

இந்தநிலையில் தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள முதல்–அமைச்சர் ரங்கசாமி நீண்ட நேரம் சபையில் இருக்கிறார். நேற்று முன்தினம் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் அவரது உரையில் அரசு குறித்து கடுமையான விமர்சனங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் அரசுக்கு எதிர்ப்பு எதையும் காட்டாமல் அரசின் ஒரு சில குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அதை திருத்தி செயல்படுங்கள் என்றுகூறி ஆலோசனைகளை வழங்கினார்.

அரசுக்கு இணக்கமான இந்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் நடவடிக்கை குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்துகேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, அவர் தொடர்ந்து அவைக்கு வந்து அரசின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டினால் நன்றாகத்தான் இருக்கும், அவரிடம் தொடர்ந்து சபைக்கு வந்து விவாதிக்குமாறும் கோரிக்கை விடுத்தேன்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி போட்டியிட்டது. இப்போது எங்களுடன் இணக்கமாக இருக்கிறதல்லவா? என்றும் கேள்வி எழுப்பினர்.


Next Story