திருமணமான 6 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


திருமணமான 6 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 10 July 2018 10:15 PM GMT (Updated: 10 July 2018 9:05 PM GMT)

திருமணமான 6 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையா? என ஆர்.டி.ஓ. சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த விளார் தொண்டைமான் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி சூரியகலா(வயது22). இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் சூரியகலா, தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தஞ்சை கரந்தை பூக்குளம் பழைய திருவையாறு ரோட்டில் வசித்து வரும் சூரியகலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்களை அழைத்து கொண்டு விளார் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் இருவீட்டினரும் கலந்து பேசி, சூரியகலாவின் உடலை கரந்தை பூக்குளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் சூரியகலா, தூக்கில் பிணமாக தொங்கியதாகவும், போலீசாருக்கு தெரியாமல் பிணத்தை எடுத்து சென்றுவிட்டதாகவும் அடையாளம் தெரியாத ஒருவர், செல்போன் மூலம் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார், கரந்தை பூக்குளத்திற்கு சென்று சூரியகலாவின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்றுமுன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் சூரியகலாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சூரியகலாவின் தந்தை கதிரேசன், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது மகள் வயிற்றுவலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதத்தில் சூரியகலா இறந்துள்ளதால் வரதட்சணை கொடுமை காரணமா? என்று தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story