சிப்பாய் புரட்சி தினம் அனுசரிப்பு நினைவு தூணுக்கு கலெக்டர் ராமன் மலர்தூவி அஞ்சலி


சிப்பாய் புரட்சி தினம் அனுசரிப்பு நினைவு தூணுக்கு கலெக்டர் ராமன் மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 10 July 2018 10:15 PM GMT (Updated: 10 July 2018 9:29 PM GMT)

வேலூரில் நேற்று சிப்பாய் புரட்சி தினம் அனுசரிக்கப்பட்டது. கலெக்டர் ராமன் கலந்து கொண்டு சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

வேலூர், 

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி சிப்பாய் புரட்சி நடந்தது. இந்த புரட்சியே இந்தியா முழுவதும் சுதந்திர போராட்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த போராட்டத்தில் உயிர்தியாகம், வீரமரணம் அடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் வேலூர் மக்கான் சந்திப்பில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 10-ந் தேதி சிப்பாய் புரட்சியில் உயிர்தியாகம் செய்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 212-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக மக்கானில் உள்ள நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் உதவி கலெக்டர் மேகராஜ், தாசில்தார் பாலாஜி, முன்னாள் படைவீரர்கள் நல துணை இயக்குனர் சங்கீதா மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story