மாவட்ட செய்திகள்

தேனி பஸ் நிலையம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் + "||" + The young man hanging dead near Theni bus station

தேனி பஸ் நிலையம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

தேனி பஸ் நிலையம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
தேனி பஸ் நிலையம் அருகே அரியலூரை சேர்ந்த வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி, 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையோரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகில் கரட்டுப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் நேற்று வாலிபர் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பை கிடந்தது. அதில் சோதனை செய்த போது அதற்குள் பிணமாக தொங்கியவரின் ஆதார் அடையாள அட்டை இருந்தது. இதனால் இறந்தவர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டான் அருகே உள்ள உடையார்பாளையத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் இதுகுறித்து தேனி வனக்காப்பாளர் ராஜசேகரன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணமாக கிடந்தவர் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘இறந்தவருக்கு பெற்றோர் இல்லை. அவருக்கு 2 அண்ணன்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். இவர் எதற்காக தேனி வந்தார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.