ஊரக வளர்ச்சித்துறையினர் வேலைநிறுத்தம்: பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் ரத்து


ஊரக வளர்ச்சித்துறையினர் வேலைநிறுத்தம்: பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் ரத்து
x
தினத்தந்தி 11 July 2018 4:37 AM IST (Updated: 11 July 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணிக்கு வராத நாட்களுக்கான சம்பளத்தை ரத்து செய்யும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்,

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான சம்பளம், புதுவாழ்வு திட்ட பணியிடங்களை ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், சாலை மறியலிலும் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று 8-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 969 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் 850 பேர் நேற்று வேலைக்கு வரவில்லை. எனினும், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதேநேரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பணிகள், அரசு மானியத்துடன் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பல பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு அந்த நாட்களுக்கான சம்பளத்தை ரத்து செய்யும்படி ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் நடந்த நாட்கள், அப்போது பணிக்கு வராத அலுவலர்கள், சம்பளம் ரத்து செய்யப்பட்ட விவரம் உள்ளிட்ட விவரங்களை வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 

Next Story