நெல்லிக்குப்பத்தில் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி அதிநவீன ஜாக்கிகள் மூலம் மீட்பு


நெல்லிக்குப்பத்தில் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி அதிநவீன ஜாக்கிகள் மூலம் மீட்பு
x
தினத்தந்தி 11 July 2018 12:04 AM GMT (Updated: 11 July 2018 12:04 AM GMT)

நெல்லிக்குப்பத்தில் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி அதிநவீன ஜாக்கிகள் மூலம் மீட்கப்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கர்நாடக மாநிலம் ராம்துர்க்கில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை(சர்க்கரை பாகு) 42 பெட்டிகளில் ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

இதையடுத்து 21 பெட்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு, மீதமுள்ள 21 பெட்டிகளை ‘யார்டில்’ விடுவதற்காக டிரைவர், ரெயிலை பின்னோக்கி இயக்கினார்.

அப்போது தண்டவாளத்தின் கடைசியில் இருந்த தடுப்பு கட்டையின் மீது கடைசி பெட்டி மோதியது. மோதிய வேகத்தில் அந்த தடுப்புக்கட்டை உடைந்தது. 10-க்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகளும் உடைந்து சிதறியது. பின்னர் கடைசி பெட்டி தடம்புரண்டு, அந்த பகுதியில் உள்ள சுல்தான்பேட்டை சாலைக்கு வந்து நின்றது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக நெல்லிக்குப்பத்துக்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சரக்கு பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. எனவே அதில் இருந்த பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை இறக்கிவிட்டு மீட்பு பணியில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இரவில் தொழிலாளர்கள் மூலம் சரக்கு பெட்டிகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை இறக்கி, லாரிகளில் ஏற்றினர். பின்னர் அவை அனைத்தும் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள், தடம்புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 19 பெட்டிகள் மட்டும் மாற்று தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் தடம்புரண்ட பெட்டியுடன், மற்றொரு பெட்டி இணைக்கப்பட்டது. அந்த பெட்டியுடன் என்ஜின் பொருத்தப்பட்டது.

பின்னர் விழுப்புரத்தில் இருந்து அதிநவீன ஜாக்கிகள் மற்றும் அதனை இயக்கக்கூடிய எந்திரம் கொண்டு வரப்பட்டது. தடம்புரண்ட பெட்டியின் கீழ் பகுதியில் 4 ஜாக்கிகள் அமைக்கப்பட்டது. பின்னர் எந்திரம் மூலம் அந்த ஜாக்கிகளை இயக்கி, தடம்புரண்ட பெட்டி தூக்கப்பட்டது. அந்த சமயத்தில் ரெயில் என்ஜின் முன்னோக்கி இயக்கப்பட்டது. இந்த பணி மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது. தடம்புரண்ட பெட்டியும் மீட்கப்பட்டது. 

Next Story