மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்கங்கள்! + "||" + Co-operative Societies

கூட்டுறவு சங்கங்கள்!

கூட்டுறவு சங்கங்கள்!
நியாயமான விலையில், தரமான பொருள்களை கூட்டுறவு பண்டகசாலையில் வாங்கலாம். விலையேற்றம், பொருள் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களிலும் இங்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்கும்.
கோ ஆப ரேட்டிவ் ஸ்டோர் அல்லது கூட்டுறவுப் பண்டகசாலை அமைப்பு யாரால், எப்போது, எப்படி? உண்டாக்கப்பட்டது என்று தெரியுமா?

முதல் கோ ஆபரேட்டிவ் இயக்கத்தை தோற்றுவித்தவரின் பெயர் வில்லியம் கூப்பர். வடக்கு இங்கிலாந்திலுள்ள ரோச்டெல் என்ற சின்ன கிராமம் இவரது பூர்வீகம். கூப்பர் சணல் நெசவாலை ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்த தொழிற்சாலையில் ‘பிளானல்கள்’ எனப்படும் சணல் சட்டைகள், உள்ளாடைகள், உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. உலகெங்கும் இந்த பொருட்கள் விற்பனைக்குப் போயிற்று. மக்கள் வசதியுளள்ள போதுதான் பிளானல் பொருட்களை வாங்குவார்கள். வசதிக்குறைவு ஏற்படும்போது யாரும் அதை அணுகமாட்டார்கள்.

1834-ல் நெருக்கடி நிலை ஏற்பட்டது. மக்களின் வாழ்க்கை வசதி வெகுவாக பாதிக்கப்பட்டது. பிளானல் தொழில் முடங்கிவிட்டது. உற்பத்தியாளர்கள் , தொழிலாளர்களின் கூலிகளை குறைத்தார்கள். வில்லியம் கூப்பரும், அவரது நணர்பர்களும் இது முறையல்ல என்று வாதாடினார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஆகவே வேலை செய்ய மறுத்தார்கள். வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

இப்போது போல அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்கள் ஏற்படவில்லை. அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை. ஆகவே வேலை இல்லாதபோது வாழ வசதி வேண்டாமா?

வேலையும் இல்லாமல், பசிக்கு உணவு தேட வகையுமில்லாமல் அவதிப்பட்ட நாட்களில் கூப்பர் தம் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தார். அவர்கள், இந்த இக்கட்டிலிருந்து விடுதலை கிடைக்க ஒரு கடையை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தார்கள்.

அந்தக் கடையில் உணவுப்பொருள்கள் மலிவாக கிடைக்க தீர்மானம் செய்தனர். 1844-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக கடையை ஆரம்பித்துவிட வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். அவர்கள் திட்டமிட்ட கடை மற்ற கடைகளிலிருந்து மாறுபட்டது. எப்படி என்றால், கடை, அதை நடத்துபவர்களுக்கு சொந்தமானதல்ல, அங்கு பொருள்களை வாங்க வரும் எல்லோருக்குமே உரிமையானது. அதாவது இந்தக்கடை ஒரு சங்கம் போன்றது. இதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் இந்த கடை தொடர்ந்து இயங்க கொஞ்சம் கொஞ்சம் பணம் முதலீடு செய்ய வேண்டும். லாபத்தை எல்லோரும் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அந்தக்கடையை எப்படி நடத்த வேண்டும் என்று யோசனைகள் கூறும் உரிமையும் உண்டு. இதுவே அவர்களின் திட்டம்.

அந்தக் காலத்தில் இது ஒரு புதுமை. இதுவே ‘கோஆபரேட்டிவ் ஷாப்’ என்று பெயர்பெற்றது. உலகின் முதல் கூட்டுறவு கடை இதுதான்.

கூட்டுறவு நிறுவனங்கள் தோன்ற காரணமாக இருந்த வில்லியம் கூப்பர் இளம் வயதிலேயே திடீரென்று இறந்து போனார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பாக கூட்டுறவு கடைகள் இங்கிலாந்து முழுவதும் பரவிவிட்டது. வேறுநாடுகளிலும் இதன் பலனை அறிந்து இதேபோல கூட்டுறவுச் சங்கங்களை நிறுவ ஆரம்பித்தார்கள். இன்று கூட்டுறவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன.