மாவட்ட செய்திகள்

பரவசம் தரும் பஞ்சுமிட்டாய்! + "||" + cotton candy

பரவசம் தரும் பஞ்சுமிட்டாய்!

பரவசம் தரும் பஞ்சுமிட்டாய்!
‘உனக்கு பஞ்சுமிட்டாய் வேண்டுமா? லாலிபாப் வேண்டுமா?’ என்று கேட்டால் நீங்கள் பஞ்சுமிட்டாயைத்தானே தேர்வு செய்வீர்கள்.
குட்டி மேகம் போன்ற வடிவம், பிய்த்துத் தின்பதற்கு எளிமை, வாயில் போட்டதும் கரைந்துவிடும் இனிமை, அனைத்தும் பஞ்சுமிட்டாயை நாக்கைத் தூண்டி இழுக்கிறது இல்லையா?. சர்க்கரை பஞ்சமிட்டாய் ஆன கதையையும், பஞ்சுமிட்டாய் பற்றிய பல்வேறு சுவாரஸ்யங்களையும் தெரிந்து கொள்வோமா...

எதிலிருந்து தயாராகிறது?

பஞ்சுமிட்டாய் எதன் கலவையில் தயாரிக்கப்படுகிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா? பஞ்சுமிட்டாயில் சர்க்கரையும், நிறமி பொடிதவிர வேறு ஒன்றும் சேர்க்கப்படுவதில்லை. சிறுதுண்டுகளாக இருக்கும் சர்க்கரையே நூலிழையாக திரித்து பஞ்சுமிட்டாய் தயாராகிறது.

பல்மருத்துவரின் கண்டுபிடிப்பு

பஞ்சுமிட்டாய் நிறைய சாப்பிட்டால் பற்கள் சொத்தையாகிவிடும் என்று அம்மா எச்சரிப்பார் இல்லையா? டாக்டர் அங்கிளிடம் சென்றாலும் பஞ்சுமிட்டாய் சாப்பிட வேண்டாம் என்று கூறுவார் இல்லையா? ஆனால் பஞ்சுமிட்டாயை கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர்தான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? டாக்டர் வில்லியம் மோரிசன் என்ற அமெரிக்க பல்மருத்துவர் 1897-ல் பஞ்சுமிட்டாய் தயாரிப்பை கண்டுபிடித்தார். இவருடன் மிட்டாய் தயாரிப்பாளர் ஜான் வார்டான் ஒருங்கிணைந்து செயல்பட்டார். மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளராக விளங்கிய மோரிசன், பருத்தி விதையில் இருந்து எண்ணெயை பிரித்தெடுக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தார். மிட்டாய் தயாரிப்பாளரான வார்டான், இந்த எந்திரத்தின் அடிப்படையில் பஞ்சுமிட்டாய் எந்திரம் உருவாக்கித் தரும்படி கூற இருவரும் இணைந்து பஞ்சுமிட்டாய் எந்திரத்தை உருவாக்கினார்கள்.

சத்துகள் உண்டா?

2 மேஜைக் கரண்டி அளவுள்ள சர்க்கரையில் 2 கால்பந்து அளவுடைய பஞ்சுமிட்டாயை உருவாக்கி விடலாம். இதில் நிறைய அளவு காற்றுதான் நிரம்பி இருக்கும் என்றாலும், இது 96 கலோரி ஆற்றல் கொண்டது. இதில் கொழுப்பு சத்து மற்றும் பிற சத்துக்கள் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் தந்தவர்

பஞ்சுமிட்டாயை மோரிசன் மற்றும் வார்டான் ஆகியோர் உருவாக்கி இருந்தாலும் அதற்கு பஞ்சுமிட்டாய் என்ற பெயரை சூட்டியவர் டாக்டர் ஜோசப் லாஸ்வாக்ஸ் என்ற மற்றொரு பல் மருத்துவர் ஆவார். 1921-ல் அவர் இந்த பெயரை சூட்டினார். அதற்கு முன்பு பஞ்சுமிட்டாய், ‘சுகரி புளோஸ்’, ‘பெயரி புளோஸ்’ என பல பெயர்களில் அழைக்கப்பட்டது.

மிட்டாய் ஏ.டி.எம்.

2009-ம் ஆண்டு அமெரிக்காவில் பஞ்சுமிட்டாய்களை வினியோகி க்கும் வெண்டிங் மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

எவ்வளவு மென்மையானது?

பஞ்சுமிட்டாய் இழைகள் மனித ரோமத்தைவிட மென்மையானது.

பஞ்சுமிட்டாய் சிற்பங்கள்

சீனாவில் பஞ்சுமிட்டாயில் சிற்பங்கள் செதுக்கி கவர்ச்சிகரமாக விற்பனை செய்கிறார்கள். பூக்கள், இதயம், விலங்குகள் வடிவில் கூட இங்கு பஞ்சுமிட்டாய்கள் கிடைக்கின்றன.

அப்பாவின் மீசை மிட்டாய்

பல்வேறு நாடுகளில் பஞ்சுமிட்டாய்க்கு வேறுவேறு பெயர்கள் உண்டு. இங்கிலாந்தில் இதை கேண்டி புளோஸ் என்பார்கள். ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்தில் ‘பெயரி புளோஸ்’ என்று அழைக்கிறார்கள். நெதர்லாந்தில் ‘சூய்கர்ஸ்பின்’ என்று பெயர். இதற்கு ‘சர்க்கரை இழை’ என்று பொருள். பிரான்சில் ‘பார்பிய பாபா’ என்று பெயர். இதற்கு ‘அப்பாவின் மீசை’ என்று பொருளாகும்.

எப்போது அறிமுகம்?

1904-ல் தான் பஞ்சுமிட்டாய் கடை களில் விற்பனைக்கு வந்தது. அமெரிக்காவின் செயின் லூயிஸ் நகரில் நடந்த உலக கண் காட்சியில் இது அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை 25 சென்ட் (அமெரிக்க நாணயம்). இது அந்த கண்காட்சி நுழைவுக் கட்டணத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கண்காட்சியில் 68 ஆயிரம் பஞ்சுமிட்டாய்கள் விற்றுத் தீர்ந்தன.

எத்தனை வண்ணங்கள்?

பஞ்சுமிட்டாய்கள் பல வண்ணங்களில், பல நறுமணங்களில் தயாராகிறது. அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் பல சுவைகளில், வாசனைகளில் பஞ்சுமிட்டாய் கிடைக்கிறது. உதாரணமாக சாக்லெட், வாழைப்பழம், சூயிங்கம், வனிலா, தர்பூசணி என பலவித நறுமணங்களை கூறலாம்.

எப்படி தயாராகிறது?

பஞ்சுமிட்டாய் தயாரிப்பில் என்ன நிகழ்கிறது தெரியுமா? பஞ்சுமிட்டாய் எந்திரத்தில் போடப்படும் சர்க்கரை முதலில் உருக்கப்படுகிறது. பின்னர் அது திரவநிலையில் இருந்து வெப்ப ஆற்றலுடன் வெளித்தள்ளப்படும்போது மீண்டும் திட நிலையை அடைந்து நூலிழைபோல வெளிவருகிறது. தேவைக்கேற்ப இதில் வண்ணம் மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

பஞ்சுமிட்டாய் தினம்

அமெரிக்காவில் டிசம்பர் 7-ந் தேதி பஞ்சுமிட்டாய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.