அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள அரியவகை பழங்கள்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலத்தில் விற்பனைக்காக அரியவகை பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தென்காசி,
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலத்தில் விற்பனைக்காக அரியவகை பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
குற்றாலம் சீசன் ஜோர்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் காலம் ஆகும். இந்த மாதங்களில் நெல்லை மாவட்டம் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் ஆனந்த குளியல் போடுவார்கள். இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. அன்று முதல் சீசன் நன்றாக இருந்தது. சீசன் களைகட்டியதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். இடையே ஒரு சில நாட்கள் சீசன் டல் அடித்தது.
இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக பரவராக மழை பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து மீண்டும் சீசன் களைகட்டியது. நேற்றும் குற்றாலத்தின் சீசன் அருமையாக இருந்தது. காலையில் இருந்தே குற்றாலத்தில் வெயில் இல்லை. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே இருந்தது. அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அரியவகை பழங்கள்குற்றாலத்தில் சீசன் சமயங்களில் அரிய வகை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இதற்காக கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பழ வகைகள் வந்து குவிந்துள்ளன. மங்குஸ்தான், ரம்டான், துரியான், முட்டை பழம், மனோ ரஞ்சிதம் பழம், வால்பேரி, பிளம்ஸ், பேரீச்சங்காய், மலை சீதா, பட்டர் புரூட்ஸ், பால் சீதா, மரதக்காளி, மலை பழம், பன்னீர் பழம், டிராகன் புரூட், ஆஸ்திரேலியா கிரேப், கிவி பழம், பீச் டாஸ், ஸ்டார் பழம் ஆகிய அரிய வகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பழ வியாபாரி பீர்முகம்மது கூறியதாவது:–
குற்றாலத்தில் ஆண்டு தோறும் சீசன் காலங்கள் ஏராளமான அரியவகை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் மங்குஸ்தான் பழம் நமது குற்றால மலையிலும் கிடைக்கிறது. பெரும்பாலான பழங்கள் கேரள மாநிலத்தில் இருந்து வருகின்றன. பொதுவாக பழங்கள் அனைத்துமே உடலுக்கு நன்மையை தரும். ஜீரன சக்தியை கொடுக்கிறது. உடல் உறுப்புகள் சீராக இயங்க பழ வகைகள் சிறந்தது.
ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனைஇவற்றில் துரியான் பழம் மலட்டுத்தன்மையை நீக்க கூடியதாகும். இந்த பழம் ரூ.600 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மலை சீதா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி உடையது. குற்றால சீசன் மாதங்களில் மட்டுமே இங்கு இந்த பழங்கள் கிடைக்கின்றன. இந்த அரியவகை பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.