அக்னிதீர்த்த கடற்கரையில் பூங்கா அமைக்க இருக்கைகள் இடிப்பு


அக்னிதீர்த்த கடற்கரையில் பூங்கா அமைக்க இருக்கைகள் இடிப்பு
x
தினத்தந்தி 11 July 2018 3:30 AM IST (Updated: 11 July 2018 11:38 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் பூங்கா அமைக்க இருக்கைகள் இடித்து அகற்றப்பட்டன.


ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை வேடிக்கை பார்க்க வசதியாக அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து சங்குமால் கடற்கரை வரை கல்லால் ஆன இருக்கைகள் மற்றும் நடைபாதைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டு இருந்தது.

தினமும் அந்த இருக்கையில் அமர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடல்அழகை பார்த்து ரசித்தபடி பொழுது போக்கி வந்தனர். இந்நிலையில் அக்னிதீர்த்தம் முதல் சங்குமால் பகுதி வரை கடற்கரையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் அனைத்தும் நகராட்சியின் மூலம் ஜே.சி.பி. எந்திரத்தை வைத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டன.

இதனால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை பார்த்து ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து சங்குமால் கடற்கரை வரை புதிதாக பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடல் அழகை பார்த்து ரசிக்க இருக்கைகள், நடைபாதை புதிதாக அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் ரூ.2 கோடியே 40 லட்சம் நிதியில் நடை பெறவுள்ளது.இதற்காக பழைய இருக்கைகள் இடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பூங்கா மற்றும் நடைபாதை,இருக்கைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு சங்குமால் கடற்கரையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சியின் மூலம் அமைக்கப்பட்ட பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் அரசின் பணம் வீணடிக்கப்பட்டது. தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள இந்த நிதியை நகராட்சி அதிகாரிகள் பயன் உள்ள வகையில் பயன்படுத்தி தரமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story